டெல்லியில் பெரும் பதற்றம்… முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை நெருங்கும் ஆபத்து – 10 இடங்களில் ED ரெய்டு.!!

டெல்லியில் சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பான வழக்கில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே மதுபானக் கொள்கை வழக்கில் சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் டெல்லியின் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த சத்யேந்தர் ஜெயின், டெல்லியின் துணை முதலமைச்சராக பதவி வகித்து வந்த மணிஷ் சிசோடியா ஆகியோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் விரைவில் கைது செய்யப்படுவார் என கூறப்படுகிறது.

டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு ஐந்து முறை சம்மன் அனுப்பியும் இதுவரை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகவில்லை. வரவிருக்கும் மக்களவை தேர்தலில் தன்னை பிரச்சாரம் செய்ய விடாமல் தடுக்கவே சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். மேலும் அரசியல் சதியின் ஒரு பகுதியாக இந்த நோட்டீஸ் அனுப்பப்படுகிறது எனவும் தெரிவித்திருந்தார்.

இப்படியான நிலையில் டெல்லியில் 12 இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியின் பொருளாளரும், எம்.பி.,யுமான குப்தா வீட்டிலும், கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் மற்றும் நெருக்கமானவர்கள் வீட்டில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. இதனால் டெல்லி வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..