டிஜிட்டல் தலைமுறைக்கு தயாராகும் அரசு பள்ளிகள்…

கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ளது. குறிப்பாகத் தொடக்கக் கல்வியில் பெற்றோர் ஆர்வத்துடன் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர்.அரசுப் பள்ளிகள் எங்கள் கண்கள், அந்த கண்களுக்கு புதிய வெளிச்சம் கிடைத்திருக்கிறது. அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் உயர்ந்திருப்பதால்தான் மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆறாம் வகுப்பு முதலே கணினி அறிவியல் பாடப்புத்தகத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் கணினி அறிவியல் பயிற்றுநர்கள் தொடர்பான முன்னெடுப்புகளும் தொடரும். தனியார் பள்ளிகளில் வசூலில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட உள்ளது. இக்குழு பள்ளிக் கட்டண நடைமுறைகளை ஆய்வு செய்து தேவையான பரிந்துரைகளை அரசுக்கு வழங்கும். பள்ளிகளின் சுற்றுப்புறத்தைத் தூய்மையாகவும், கற்றலுக்கு ஏற்ற சூழலாகவும் பராமரிக்கப் பள்ளி அலுவலகங்களுக்கு வழங்கப்படும் நிதியை அதிகரிக்க முதலமைச்சர் அவர்களிடம் அனுமதி பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

மேலும் முதலமைச்சரின் பயணம் குறித்து பேசிய அவர்

முதலமைச்சரின் பயணத் திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் குறித்து அவரது அலுவலகமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். இது இரு மாநிலங்கள் தொடர்புடைய முக்கியமான மற்றும் உணர்வுப்பூர்வமான விவகாரம் என்பதால் உடனடியாக கருத்து தெரிவிக்க முடியாது’ என்றார்.மேலும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன்,அந்தத் திரைப்படம் குறித்து அதனுடன் தொடர்புடையவர்களே கருத்து தெரிவிக்க வேண்டும். அதற்கு அமைச்சர் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை’ என்று கூறி தனது பேட்டியை நிறைவு செய்தார்.