திமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் பங்கேற்று உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவரும் திமுக மூத்த தலைவருமான உதயநிதி ஸ்டாலின், தேர்தல் வெற்றி மற்றும் தோல்விகளைக் கடந்து எப்போதும் மக்களுக்காக உறுதியுடன் நிற்கும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) 4 மாதகால ஆட்சியின் போதாமைகளையும் நிர்வாகச் சிக்கல்களையும் சுட்டிக்காட்டி அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த போதிலும், திமுக மக்கள் நலப் பணிகளிலும் பொறுப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படுவதிலும் தொய்வின்றி இயங்கி வருகிறது. தேர்தல் வெற்றி, தோல்விகளுக்கு அப்பாற்பட்டுப் பொதுமக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து களத்தில் நிற்பதே இயக்கத்தின் முதன்மை நோக்கம்.திருமண விழாவில் மணமக்களை வாழ்த்திப் பேசிய அவர், காதல் திருமணங்களில் பல கஷ்டங்களும் சவால்களும் இருப்பது இயல்பு என்றும், அதைத் தாண்டி உறுதியுடன் பயணிப்பது முக்கியம் என்றும் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே முதன்முறையாக இத்தகைய ஒரு டம்மி முதலமைச்சரை மக்கள் பார்க்கிறார்கள். பொதுமக்களின் அன்றாடப் பிரச்சினைகள் குறித்து சட்டமன்றத்திலோ அல்லது பொதுவெளியிலோ கேள்வி எழுப்பினால், அதற்குப் பதில் சொல்ல முடியாமல் முதலமைச்சர் முழிக்கிறார். மாநிலத்தில் நாளுக்கு நாள் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. அதேபோலத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சீரற்ற மின்விநியோகம் மற்றும் மின்வெட்டு ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்து 4 மாதங்கள் கடந்த நிலையிலும், மக்கள் பயன்பாட்டிற்காக எந்தவொரு புதிய திட்டத்தையும் இதுவரையில் செயல்படுத்தவில்லை.
தவெக ஆட்சியாளர்களின் இந்தச் செயலற்ற தன்மையைக் கண்டிக்கும் வகையிலும், மக்கள் நலனை மறந்த அரசுக்கு உணர்த்தும் வகையிலும் வரவிருக்கும் இடைத்தேர்தலில் பொதுமக்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும் என தெரிவித்தார்.




