சென்னைவாசிகளுக்கு குட் நியூஸ்… மீண்டும் வருகிறது “டபுள் டக்கர் பஸ்”.. எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கு.!!

சென்னை: சென்னை மக்களுக்கு குட்நியூஸ் சொல்லி உள்ளது தமிழக அரசு.. விரைவில் டபுள் டக்கர் பஸ் வரப்போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

முன்பெல்லாம் டபுள் டக்கர் பஸ் என்றாலே சென்னைவாசிகளிடம் படுபேமஸ்.. இரண்டடுக்கு பேருந்துகள் எனப்படும் டபுள்டக்கர் பஸ், மாடிப்பேருந்துகள் என்றும் சொல்வார்கள்..

குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும், இந்த பஸ்ஸூக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது. கடந்த 1997ல் இந்த டபுள் டக்கர் பஸ் அறிமுகம் செய்யப்பட்டது.. மின் கம்பிகள் இல்லாத, மரங்கள் தாழ்வாக இல்லாமல் இருக்கும் சாலைகள் எங்குள்ளது என்றெல்லாம் ஆய்வு செய்யப்பட்டு, அதற்கு பிறகே டபுள் டக்கர் பஸ்கள் விடப்பட்டன.. இதற்கு மக்கள் வரவேற்புகளை தந்ததுடன், நிறைய சினிமாக்களில் காட்சிகளாக இந்த டபுள் டக்கர் பஸ் இடம்பெற்றதால், கூடுதல் மவுசு எகிறியது.ஆனாலும், இந்த பஸ்ஸை இயக்குவதில் ஒரு சிக்கல் எழுந்தது.. அதிகபட்சமாகவே இந்த வகை பஸ்கள், 50 கிலோ மீட்டர் வேகம் மட்டுமே இயக்கப்படும்.. அதற்கு மேல் ஓட்டினால் கவிழ்ந்து விடும் அபாயம் இருந்தது. மேலும், சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்ததால், டபுள் டக்கர் பஸ் சேவையை தொடர முடியாமல் போனது.. எனவே, 2008-லேயே இந்த பஸ்ஸின் சேவை நிறுத்தப்பட்டுவிட்டது.

சென்னை மட்டுமல்லாமல், பெங்களூரு, மும்பை உள்ளிட்ட நகரங்களிலும், இந்த பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. அங்கேயும் இதே சிக்கல்கள் எழுந்ததால் நிறுத்தப்பட்டுவிட்டன. இப்போது மறுபடியும் இந்த பஸ்ஸின் சேவையை சென்னையில் கொண்டுவர திட்டமிடப்படுகிறதாம்..

இதற்கான பேச்சுவார்த்தையும் ஆரம்பமாகி உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.. ஆனால், சென்னையில் எதன் அடிப்படையில் டபுள் டக்கர் பேருந்து சேவையை இயக்குவது என்றும் சுற்றுலாத்தலங்களை இணைக்கும் வகையில் இந்த சேவையை கொண்டு வரலாமா என்பது குறித்தும் ஆய்வு செய்து வருவதாகவும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.. எனினும், இதுதொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்..

கார்கள் மற்றும் தனியார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மிகுதியாகி விடுகிறது.. எனவே, போக்குவரத்து நெரிசலை தடுக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.. அதற்காக கார்கள் உள்ளிட்ட வாகனங்களை பயன்படுத்துவோரை தடுக்க முடியாது என்பதால்தான், பஸ்களின் எண்ணிக்கையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க திட்டமிட்டது.

அந்த வகையில், டபுள் டக்கர் பஸ்கள், போக்குவரத்து நெரிசலை தடுக்க தற்காலிக தீர்வாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.. முழுமையான குளிர்சாதன வசதி கொண்டவையாக இருக்கும். சாதாரண பஸ்கள் பயன்படுத்தும் பரப்பளவையே இந்த பஸ்ஸும் எடுத்துக்கொள்ளும்.. ஆனால் இரண்டடுக்கு பஸ்களில், இரண்டு மடங்கு பயணிகள் பயணிக்கலாம் என்பதால் போக்குவரத்து நெரிசலும் குறையும். வருமானமும் இரட்டிப்பாகும் என்று நம்பப்படுகிறது.

மறுபடியும் டபுள் டக்கர் பஸ் வரப்போவதாக தமிழக அரசு சொல்லியுள்ளது, சென்னைவாசிகளை குஷியில் ஆழ்த்தி வருகிறது.. அதே வரவேற்பு மீண்டும் இந்த பஸ்ஸுக்கு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.