தங்கத்தின் விலை ஒரே மாதத்தில் பவுனுக்கு ரூ. 1,650 குறைந்தது- இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..!!

கோவை:
தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக ஒரு பவுன் ரூ. 39 ஆயிரம் வரை என விற்பனை செய்யப்பட்டு வந்தது.

கடந்த செப்டம்பர் 10-ந் தேதி ரூ.39,056-க்கு விற்ற நிலையில் அக்டோபர் 15-ந் தேதி ரூ.37,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தின் விலை ஒரு மாதத்தில் மட்டும் ரூ. 1,656 குறைந்துள்ளது.

இன்று ரூ.200 அதிகரித்து ஒரு பவுன் ரூ.37,600-க்கு விற்பனையானது.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தங்கத்தின் விலை குறைந்து வருவதால் நகைகள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் மற்றும் வியாபாரிகள் கூறியதாவது:-
தீபாவளியின் போது தங்கத்தின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்த்த நிலையில் விலை குறைந்து வருகிறது. உக்ரைன் -ரஷ்யா இடையிலான போர் காரணமாக ரஷ்யாவின் நாணயத்தை வாங்க பல உலக நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் தன்னிடம் இருப்பு வைக்கப்பட்டுள்ள தங்கத்தை அதிகளவு உலக மார்க்கெட்டில் விற்பனை செய்து ரஷ்யா தனது பொருளாதார தேவையை பூர்த்தி செய்து வருகிறது. இதன் காரணமாக தங்கத்தின் விலை கணிசமாக குறைந்து வருகிறது. இருப்பினும் இந்தியாவில் குறைந்த அளவே விலை குறைந்து காணப்படுகிறது. இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளதே இதற்கு காரணம். இல்லை என்றால் தற்போது ஒரு பவுனுக்கு ரூ.4ஆயிரம் வரை விலை குறைந்திருக்கும்.

வழக்கமாக தீபாவளி பண்டிகையின் போது கடைசி 3 நாட்களில் தங்க நகைகள் விற்பனை அதிகரிக்கும். தினமும் 200 கிலோ தங்க நகைகள் விற்பனை செய்யப்படும். கடந்த 2 ஆண்டுகளில் 70, 80 சதவீதம் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு பண்டிகையின் கடைசி 3 நாட்களில் தினமும் 210 கிலோ தங்க நகைகள் விற்பனை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.