கோவை:
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வரும் 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இதையொட்டி கோவையில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களில் வேலை செய்து வரும் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகைக்கு தங்களது சொந்த ஊா்களுக்கு செல்லவார்கள். அவர்களுக்கு வசதியாக அக்டோபா் 21 -ந் தேதி முதல் 23-ந் தேதி வரை கோவையில் இருந்து மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. மதுரைக்கு 100 பஸ்களும், தேனிக்கு 40 பஸ்களும், திருச்சிக்கு 50 பஸ்களும், சேலத்துக்கு 50 பஸ்களும் என மொத்தம் 240 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
போக்குவரத்து மற்றும் பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் தீபாவளி பண்டிகைக்காக இயக்கப்படும் சிறப்பு பஸ்கள் பல்வேறு பஸ் நிலையங்களில் இருந்து இயக்கப்படுகிறது.
அதன்படி மதுரை, தேனி மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் சிங்காநல்லூா் பஸ் நிலையத்தில் இருந்தும், கரூா், திருச்சி செல்லும் பஸ்கள் சூலூா் பஸ் நிலையத்தில் இருந்தும், சேலம், திருப்பூா், ஈரோடு, ஆனைகட்டி செல்லும் பஸ்கள் கோவை மத்திய பஸ் நிலையத்தில் இருந்தும், மேட்டுப்பாளையம், ஊட்டி, சத்தியமங்கலம் செல்லும் பஸ்கள் மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனியில் உள்ள புதிய பஸ் நிலையத்தில் இருந்தும் இயக்கப்படுகிறது.
இந்த பஸ் நிலையங்களுக்கு பொது மக்கள் எளிதில் செல்வதற்காக காந்திபுரம் நகரப் பஸ் நிலையம், உக்கடம் பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
Leave a Reply