பொதுச்செயலாளர் யார் என்பதை ‘இனிமே பார்க்கத்தானே போறீங்க… சசிகலா பரபரப்பு பேட்டி..!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி – நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் சாய்பாபா கோயில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கடந்த ஒரு வார காலமாக யாக சாலைகள் அமைக்கப்பட்டு கணபதி ஹோமம் உள்ளிட்ட ஹோமங்கள் வளர்க்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இன்று கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு ஒரே நேரத்தில் 7 கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் மட்டுமன்றி அண்டை மாவட்டங்களான தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 30,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கும்பாபிஷேகத்தை காண்பதற்காக ஒரே இடத்தில் குவிந்தனர். மேலும் கும்பாபிஷேகம் நடைபெற்ற பின்னர் ஹெலிகாப்டர் மூலமாக மலர்கள் பக்தர்கள் மீது தூவப்பட்டன. மேலும் இந்த கும்பாபிஷேகத்தை காண்பதற்காக சசிகலா மற்றும் சசிகலா சகோதரர் திவாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில் கும்பாபிஷேகத்தை காண்பதற்காக அதிக அளவில் பக்தர்கள் திரண்டதால் திருத்துறைப்பூண்டி – நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி – வேதாரண்யம் உள்ளிட்ட சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் காலை நேரத்தில் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லக்கூடிய மாணவ, மாணவிகள் மேலும் வேலைக்கு செல்லக்கூடிய பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் இந்த போக்குவரத்து நெரிசலால் மிகவும் பாதிக்கப்பட்டனர். அதனை அடுத்து திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் மேல் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். போக்குவரத்து நெரிசலை சரி செய்ய முடியாமல் காவல்துறையினர் திணறியது குறிப்பிடத்தக்கது. மேலும் சசிகலா கும்பாபிஷேகத்துக்கு வருகை தந்திருந்த போது ஏராளமான பொதுமக்கள் அவரிடம் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மேலும் வழி நடுக அதிக அளவில் திரண்டு இருந்த பொது மக்களிடம் கைய சேர்த்து காண்பித்து அங்கிருந்து புறப்பட்டார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா கூறியதாவது, அதிமுக பொதுச்செயலாளரை பொதுமக்களும் கழக உடன்பிறப்புகளும் முடிவு செய்ய வேண்டிய விஷயம். ஓபிஎஸ் மட்டுமல்ல எல்லோரும் வந்தாலும் நான் சந்திப்பேன் என்றார். முன்னாள் அமைச்சர்கள் தற்போதைய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார்களா என்ற கேள்விக்கு, பொறுத்திருந்து பாருங்கள் என்றார். எடப்பாடி பழனிசாமி நான்தான் பொதுச்செயலாளர் என கூறி வருவதற்கு உங்களுடைய பதில் என்ன என்ற கேள்விக்கு… இனிமே பார்க்கத்தானே போறீங்க என பேட்டியளித்தார்.