இபிஎஸ் தற்போது வகிப்பது தற்காலிக பதவிதான்- முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!

ன்றைக்கு அதிமுக கட்சி ஓபிஎஸ், இபிஎஸ் என இரு அணிகளாக பிளவுபட்டு உள்ளது என திருமண விழாவில் முதலமைச்சர் பேச்சு.

மதுரை பாண்டிகோயிலில் நடைபெற்ற வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், திமுக அரசு மீது தமிழக மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளனர். மக்கள் நம்பிக்கையுடன் கோரிக்கை மனு அளிக்கின்றனர். தமிழகம் முதன்மைமாநிலமாக உருவாக வேண்டும் என்று பணியாற்றிக்கொண்டியிருக்கிறோம். திமுக மீது நம்பிக்கை வைத்தே மக்கள் வாக்களித்தார்கள் என கூறினார்.

திருமண விழாவிற்கு குறிப்பு எடுத்து செல்வது இல்லை, அமைச்சர் மூர்த்தியை பற்றி பேச வேண்டி இருப்பதால் இந்த விழாவிற்கு குறிப்புடன் வந்துள்ளேன். மூர்த்தி பெரிதா ? கீர்த்தி பெரிதா என கேட்டால் கீர்த்தி பற்றி தெரியல மூர்த்தி தான் பெரியது”. திருமண விழா என்று விளம்பரப்படுத்தாமல் மண்டல மாநாடு என கூறியிருக்கலாம்.

மகனின் திருமணம் மூலம் கட்சி வளர்ச்சி, எழுச்சி பெற வேண்டும் என இவ்வாறு ஏற்பாடு செய்துள்ளார் என்றும் தெரிவித்தார். அமைச்சரவையில் உள்ள அனைவரும் சிறந்தவர்கள். பத்திரப்பதிவுத்துறையில் தமிழக அரசு சாதனை படைத்துள்ளது. உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் மூலம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுகிறது.

மதுரை மாநகர வளர்ச்சிக்காக பல்வேறு திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன என கூறினார். இதன்பின் பேசிய முதல்வர், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி உள்ளிட்ட தேர்தலில் படுதோல்வி. இன்றைக்கு அதிமுக கட்சி ஓபிஎஸ், இபிஎஸ் என இரு அணிகளாக பிளவுபட்டு உள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி தற்போது வகிப்பது தற்காலிக பதவிதான்.

அப்படி இருக்கும்போது அவர் திமுகவை விமர்சிக்கிறார். அதிமுக எம்எல்ஏக்களே அவர்களிடம் பேசுவதில்லை. நானும் இந்த நாட்டில் உயிரோடு இருக்கிறேன் என காட்டிக்கொள்வதற்கு தான் இந்த காமெடி கதையெல்லாம் விட்டுக்கொண்டு இருக்கிறார் என கடுமையாக முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்தார். நல்லது செய்வதற்கே இப்பொது நேரமில்லை, திட்டமிட்ட பொய் பிரச்சாரத்தை பற்றி கவலை இல்லை. மக்கள் நன்மை செய்ய திமுகவுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்கள். அந்த நன்மையை மட்டும் செய்வோம், மக்களுக்காக வாழ்வோம் என கூறினார்.