டெல்லியில் ரோட்டோரக் டீ கடையில் தேநீர் அருந்திய ஜெர்மனி அதிபர்..!

ந்தியாவுக்கு வருகை தந்த ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் டெல்லியில் சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய சம்பவம் கவனமீர்த்துள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று இரண்டு நாள்கள் சுற்றுப் பயணமாக ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் நேற்று முன்தினம்  (பிப்.25) டெல்லி வந்தார். இந்தியா – ஜெர்மனி இடையேயான இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவது குறித்தும், உக்ரைன் பிரச்னை குறித்து விவாதிக்கவும் இந்தியா வருகை தந்துள்ள ஷோல்ஸ், 2021ஆம் ஆண்டு டிசம்பரில் ஜெர்மனி அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.

இந்நிலையில், மூத்த அதிகாரிகள், உயர்மட்ட வர்த்தகக் குழுவினருடன் இந்தியா வந்துள்ள ஜெர்மனி அதிபருக்கு முன்னதாக குடியரசுத் தலைவர் மாளிகையில் முன்னதாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடியை அவர் சந்தித்துப் பேசியதுடன் இருவரும் இணைந்து செய்தியாளர் சந்திப்பிலும் கலந்துகொண்டனர்.

“ஜெர்மனிக்கும் இந்தியாவுக்கும் இடையே ஏற்கனவே நல்லுறவு நிலவி வருகிறது. இந்த உறவு வலுபடும் என்று நான் நம்புகிறேன். நமது நாடுகளின் வளர்ச்சி மற்றும் உலகின் அமைதி தொடர்பான அனைத்து விஷயங்களையும் தீவிரமாக விவாதிப்போம் என்று நான் நம்புகிறேன்” என ஷோல்ஸ் தெரிவித்தார்.

இந்நிலையில் ஓலாஃப் ஷோல்ஸ் டெல்லியில் உள்ள சாலையோர தேநீர் கடையில் அமர்ந்து தேநீர் அருந்திய புகைப்படங்களை முன்னதாக இந்தியாவுக்கான ஜெர்மனி தூதரகம் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் மகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளது.

“ருசியான கப் தேநீர் இல்லாமல் இந்தியாவை எப்படி சுற்றிப்பார்க்க முடியும்? சாணக்யபுரியில் தெரு முனையில் உள்ள எங்களுக்குப் பிடித்த டீக்கடைக்கு ஓலாஃப் ஷோல்ஸை நாங்கள் அழைத்துச் சென்றோம். நீங்கள் அனைவரும் இங்கு செல்ல வேண்டும். இந்தியாவின் உண்மையான சுவை இது தான்” என்று முன்னதாக இந்தியாவுக்கான ஜெர்மனி தூதரகம் ட்வீட் செய்துள்ளது.