ஜி 20 உச்சி மாநாடு… உலக தலைவர்களை வரவேற்கும் தமிழ்நாட்டு நடராஜர் சிலை..!

டெல்லி: டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெறும் இடத்திற்கு முகப்பில் 28 அடி உயர பிரம்மாண்ட நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

இந்த சிலை சுவாமிமலையிலிருந்து டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது. இது கடந்த 5ஆம் தேதி நிறுவப்பட்டது.

டெல்லியில் பிரகதி மைதானத்தில் பாரத் மண்டபத்தில் இன்றும் நாளையும் ஜி20 மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் முகப்பு பகுதியில் பிரம்மாண்டமான நடராஜர் சிலையை அமைக்க மத்திய அரசின் கலாச்சார துறையின் கீழ் இயங்கும் தேசிய கலை மையம் முடிவு செய்திருந்தது.

அதன்படி தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில் உள்ள ஸ்ரீதேவசேனாதிபதி சிற்பக் கூடத்திற்கு சிலை வடிவமைக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது. ஸ்தபதிகள் தே. ராதாகிருஷ்ணன், தேவ.ஸ்ரீகண்டன், தேவ.சுவாமிநாதன் உள்ளிட்டோர் இந்த சிலையை வடிவமைக்கும் பணியை மேற்கொண்டனர்.

28 அடி உயரம் , 21 அடி அகலம், 18 டன் எடை கொண்டது. இந்த நடராஜர் சிலை. இது செம்பு, பித்தளை, இரும்பு, தங்கம், வெள்ளி, வெள்ளீயம், பாதரசம் ஆகிய 8 உலோகங்களை கொண்டு அஷ்டதாதுக்களால் அமைக்கப்பட்டது. இத்துடன் 7 டன் எடையில் நடராஜருக்கான பீடமும் தயாரிக்கப்பட்டது.

சிலை தயாரான நிலையில் இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் தலைவர் ஆர்த்தல் பாண்டியா தலைமையிலான அலுவலர்கள் ஜவகர் பிரசாத், மனோகர் தீட்சித் ஆகியோர் கடந்த மாதம் 25 ஆம் தேதி சுவாமி மலை வந்து நடராஜர் சிலையை ஸ்தபதிகளிடம் இருந்து பெற்றுக் கொண்டனர். இந்த சிலை கடந்த மாதம் 28ஆம் தேதி டெல்லிக்கு அனுப்பப்பட்டது.

சிலைக்கு கூடுதலாக மெருகூட்டவும் சிறப்பு பூஜைகள் செய்து கண்களை திறக்வும் ராதாகிருஷ்ணன், தேவ சுவாமிநாதன் உள்ளிட்ட 20 ஸ்தபதிகள் கடந்த மாதம் 29ஆம் தேதி விமானம் மூலம் டெல்லி சென்றனர். அங்கு அவர்கள் சிலைக்கு இறுதி வடிவத்தை கொடுத்தனர். இதையடுத்து இந்த சிலை ஜி20 மாநாடு நடைபெறும் இடத்தின் முகப்பில் கடந்த 5ஆம் தேதி நிறுவப்பட்டது. இதன் மதிப்பு ரூ 10 கோடி. உலகிலேயே மிகப் பெரிய நடராஜர் சிலை இது என்கிறார்கள்.

இந்த சிலையை வடிவமைத்தவர்கள் சோழர் காலத்தில் தஞ்சை பெரிய கோவில் நடராஜர் சிலையை வடிவமைத்த குடும்பத்தினர். இந்த குடும்பத்தினரின் முன்னோர்கள் தஞ்சை பெரிய கோயிலை கட்டுவதில் பங்காற்றியுள்ளனர். இதையடுத்து 16 ஆம் நூற்றாண்டில் தாராசுரம் மற்றும் சுவாமி மலையில் உள்ல கோயில் சிலைகளின் நிர்மாண பணிகளுக்காக சுவாமி மலைக்கு சென்றனர். இவர்கள் அங்கேயே தங்கி சிற்ப பணிகளை செய்து வருகிறார்கள்.

34 தலைமுறைகளாக சிலைகள் வடிக்கும் பணியை செய்து வருகிறார்கள். பிரிட்டன், அமெரிக்கா, மலேசியா, மொரிசீயஸ், பிரான்ஸ், கனடா போன்ற நாடுகளில் உள்ள இந்து கோயில்களுக்கும் இவர்கள் சிலை வடித்து கொடுத்துள்ளனர். இந்த சிலையை வடிக்க 7 மாதங்கள் ஆகின. தஞ்சை பெரிய கோயில் ,சிதம்பரம் நடராஜர் கோயில், கோனேரி ராஜபுரம் கோயில் ஆகிய 3 கோயில்களில் உள்ள நடராஜர் சிலைகளின் மாதிரியை கொண்டு உருவாக்கப்பட்டது.