மீண்டும் முதல்ல இருந்தா… அச்சுறுத்தும் கொரோனா.. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மாற்றபடுகிறதா..? அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் பள்ளி திறக்கும் தேதி மாற்றப்படுமா என்பது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் வருகிற திங்கள் கிழமை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சம்பவம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகையால், பள்ளிகள் திறக்கப்படுவது தள்ளி வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்;- இந்தியா முழுமைக்கும் 6000-ஐ கடந்த நிலையில், மகாராஷ்டிராவில் மட்டுமே கடந்த 24 மணி நேரத்தில் 3000 என்ற எண்ணிக்கையிலும், கேரளாவில் 1000-ஐ கடந்து மூன்று மாதங்களாக கூடிக்கொண்டிருக்கிறது. சென்னையில் மட்டுமே நேற்று 95 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 22 இடங்களில் ஒன்றுக்கு மேற்பட்டோருக்கு தொற்று இருந்தது. அவர்களையும், அவர்கள் தொடர்புடையவர்களையும் தீவிரமாக கண்கானித்துக் கொண்டிருக்கிறோம்.

கல்வி நிறுவனங்களில் குறிப்பாக ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம், சக்திசாய் பல்கலைக்கழகம் மற்றும் ராஜூவ் காந்தி இன்ஸ்டியூட் போன்ற நிறுவனங்களில் தொற்று கூடுதலாகி தற்போது ஐஐடி மற்றும் சக்தி சாய் பல்கலைக்கழகத்தில் தொற்று இல்லாத நிலையை அடைந்துள்ளது. அண்ணா பல்கலைகழகத்தில் மட்டும் 23 நபர்களுக்கு மட்டும் தொற்று இருந்த நிலையில் அவர்களில் பெரும்பாலோனோருக்கு தொற்று குறைந்துள்ளது. தொற்றின் வேகம் என்பது கூடுதலாக இருந்து கொண்டிருக்கிறது/ அதே நேரத்தில் பாதுகாப்பாகவும் முன்னேச்சரிக்கையாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும்.

தமிழகத்தை பொறுத்தவரை முகக்கவசம் அணியவேண்டியது இல்லை என்ற அறிவிப்பை நாம் வெளியிடவில்லை. ஏனென்றால் பேரிடர் முடிகிறவரை நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். பொது நிகழ்ச்சிகளில் கூட முகக்கவசம் அணிய வேண்டியது என்பதை கட்டாயமாக்கிக் கொண்டிருக்கிறோம். தடுப்பூசியை பொறுத்தவரை தமிழ்நாட்டில் 42,87,346 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி போட வேண்டியுள்ளது, 2-வது தவனை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியவர்கள் 2 கோடி பேர் இருந்த நிலையில் தற்போது 1 கோடியே 20 லட்சமாக குறைந்துள்ளது. மொத்தமாக 1 கோடியே 64 இலட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடவேண்டியுள்ளது. ஜூன் 12ம் தேதி மீண்டும் ஒரு லட்சம் இடங்களில் தமிழ்நாடு முழுவதிலும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படவுள்ளது.

வரும் ஜூன் 13இல் பள்ளிகள் திறக்கப்பட்டதும், 12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கோர்பவேக்ஸ் இரண்டாவது டோஸ் செலுத்தப்படும். கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. இருந்த போதிலும் எந்த புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாது. அதற்கான அவசியமும் தற்போது இல்லை. கொரோனா பரவல் சற்று அதிகரித்தாலும் பாதிப்பு 100 முதல் 200 பேர் பாதிப்பு என்ற அளவில் தான் உள்ளது. எனவே பள்ளிகளை திறப்பதில் பிரச்சினை இல்லை என தெரிவித்துள்ளார்.