மக்களே உஷார்… வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்: தொடர்ந்து 3 நாட்கள் பணிகள் முடங்கும் அபாயம்..!

வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதால், தொடர்ந்து 3 நாட்கள் வங்கி பணிகள் முடங்கிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இம்மாத கடைசி சனி, ஞாயிறு தினங்கள் (ஜூன் 25,26ம் தேதிகள்) விடுமுறை தினங்களை அடுத்து ஜூன் 27 திங்கட்கிழமை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். வேலை நிறுத்த போராட்டத்திற்கு, அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், தேசிய வங்கி ஊழியர்கள் அமைப்பு உள்ளிட்ட 9 சங்கங்களை உள்ளடக்கிய வங்கி சங்கங்களின் ஒருங்கிணைப்பு அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் வெங்கடாச்சலம் செய்தியாளர்களிடம் கூறும் போது, ”அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் ஓய்வூதியத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும். வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வேலை செய்ய வேண்டும். நிலுவை தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 27ம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்தார்.

இதனால் நாடு முழுவதும் பணியாற்றி வரும் 7 லட்சம் வங்கி பணியாளர்கள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வங்கி சேவைகள் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. மேலும் ஏடிஎம் மையங்களிலும் போதுமான பணம் இருக்காது என்று கூறப்படுவதால் பொது மக்கள் தங்கள் பணப் பரிவர்த்தனைகளை எவ்வாறு மேற்கொள்வது என்ற குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர்