அரசு மருத்துவர் தாக்கப்பட்டதன் எதிரொலியாக சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காவல்நிலைய பூத் (Police Booth) அமைக்கப்படும் என சென்னை மாநகர ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில், புற்றுநோய் பிரிவு மருத்துவர் பாலாஜியை, விக்னேஷ் என்ற இளைஞர் நேற்று கத்தியால் குத்தினார். இதனால் படுகாயமடைந்த மருத்துவர் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கைது செய்யப்பட்ட விக்னேஷ் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவை அடுத்து நவம்பர் 27ஆம் தேதி வரை விக்னேஷ் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மருத்துவர் பாலாஜி தற்போது நலமுடன் இருப்பதாக தெரிவித்த நிலையில், அவர் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, சென்னையில் உள்ள 19 அரசு மருத்துவமனைகளில் ஏற்கெனவே 9 இடங்களில் காவல் நிலையங்கள், பூத்துகள் உள்ளன.
மீதமுள்ள 10 அரசு மருத்துவமனைகளிலும் விரைவில் காவல்நிலைய பூத் அமைக்கப்படும். இதனால் எப்போதும் ஒரு காவல் அதிகாரி அங்கு இருப்பார் என்றும், மருத்துவமனை பாதுகாப்பு பணியினை அவர் மேற்கொள்வார் என்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.