மும்பை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் – பாதுகாப்பு பணிகள் தீவிரம்.!!

மும்பை: மும்பை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.கடந்த சில தினங்களாக விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவம் அரங்கேறி வருகிறது.
அக்டோபரில் மட்டும் 450க்கும் மேற்பட்ட வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனை தடுக்க, மிரட்டல் விடுத்து அழைக்கப்பட்ட மொபைல் எண் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அடிப்படையில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று (நவ.,14) மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. மும்பையில் இருந்து அஜர்பைஜான் செல்லும் விமானத்தில் வெடிமருந்துகள் எடுத்து செல்லப்படுவதாக, சி.ஐ.எஸ்.எப்., கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்தது.

இது குறித்து, உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விமான நிலையத்தில் போலீசார், வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் சோதனை நடத்தினர். மிரட்டல் புரளி என தெரியவந்தது. அங்கு, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.