பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்- அண்ணாமலை பேட்டி..!

மிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை திநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சியின் தலைவரான ரா. அர்ஜுனமூர்த்தி பாஜகவில் இணைந்தார். இவர் நடிகர் ரஜினிகாந்த் ஆரம்பிக்க இருந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை பாஜகவின் அடிப்படை உறுப்பினராக்கி, அதற்கான உறுப்பினர் அட்டையை பாஜக தலைவர் அண்ணாமலை அர்ஜுனமூர்த்திக்கு வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, மின் கட்டணம் குறித்து மக்கள் இடம் கருத்து கேட்போம் என்று மின்துறை அமைச்சர் கபட நாடகம் நடத்தி வருகிறார். வசூல் வேட்டைக்காகவே மாநில அரசு மின்கட்டண உயர்வு குறித்து மக்களிடம் கருத்து கேட்கிறோம் என நாடகம் நடத்தி வருகிறது. எனவே கருத்து கேட்பதை நிறுத்திவிட்டு உடனடியாக மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பது தன் பாரதிய ஜனதா கட்சியின் கோரிக்கை.

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி மூலம் இதுவரை சுமார் 30 தற்கொலைகள் நடந்துள்ளது. ஆன்லைன் ரம்மிக்கு கருத்து கேட்கின்றோம் என்று சொல்லுவதை விட்டு ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க வேண்டும்.

திமுக 506 இலவச திட்டங்களை அறிவித்து இருக்கிறார்கள். அதில் ஒன்று கூட நிறைவேற்ற முடியாது என்று தெரிந்தது. அந்த திட்டங்கள் எல்லாம் வெறும் திட்டங்களாகவே இருக்கின்றன. இலவச மகளிர் பேருந்து எப்போது வருகிறது என்றே தெரியவில்லை. கல்வி, சுகாதாரம் போன்றவை இலவசங்களாக கொடுக்கப்பட வேண்டும். பிரதமர் மோடி இலவசமாக கொடுத்த வீடு, கேஸ் இணைப்பு போன்றவை இலவசங்கள் அல்ல. அவை மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமை என்று குறிப்பிட்டார்.

பாரதிய ஜனதா கட்சி பொது மக்களுக்காக செயல்பட கூடியகட்சி. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதற்கு பாஜக என்றும் ஆதரவு அளிக்கும். சில கோயில்களில் பூஜை செய்யும் ஆகம சாஸ்திர முறைகளை சரியாக கடைபிடித்து அதற்கேற்றாற்போல் செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் விவசாயத்திற்கு இலவசமான மின்சாரம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

அதிமுக இலவச திட்டங்கள் அறிவித்தால் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, அடுத்த தேர்தல் வரட்டும் அதிமுக இலவச திட்டங்கள் அறிவித்தால் மக்களுக்கு பயன் அளிக்கும் திட்டங்கள் இருக்க என்று பார்ப்போம். அதன் பின் அதை பற்றி பேசலாம் தற்போது அதை பற்றி பேச கூடாது என்று கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுனமூர்த்தி, மீண்டும் பாஜகவில் இணைந்து உள்ளேன். பாஜக வெற்றிக்காக பாடுபடுவேன். ஆன்மிக அரசியலுக்காக ரஜினியிடம் இருந்தேன். மீண்டும் அதே நோக்கத்திற்காக பாஜவில் இணைந்துள்ளேன். திமுக தொலைநோக்கு திட்டங்கள் இல்லாமல் செயல்படுகிறது என தெரிவித்தார்.