திமுக அரசு வேண்டுமென்றே திட்டமிட்டு லஞ்ச ஒழிப்பு போலீசாரை ஏவி விட்டுள்ளது – எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு.!!

கோவை : முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு, அவரது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் வீடுகள், அலுவலகங்கள் என தமிழகம் முழுவதும் 58 இடங்களில் நேற்று மீண்டும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனைக்கு பின்னர் எஸ் .பி. வேலுமணி தனது வீட்டில் அளித்த பேட்டியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க அரசு தூண்டுதலின் பேரில் எனது வீட்டிலும் ,எனது சகோதரர் வீடு மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் என்னுடன் பழகியவர்கள் உள்பட பலரது வீடுகளில் சோதனை நடைபெற்று உள்ளது

இந்த சோதனை முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடைபெற்றுள்ளது.ஏற்கனவே ஒருமுறை இதுபோன்ற சோதனை நடைபெற்றது .இப்போது மீண்டும் 2-வது முறையாக சோதனையை நடத்தி உள்ளனர். வேண்டுமென்றே திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கத்துடன் இதுபோன்று செயல்படுகிறார்கள். திமுக அரசு வேண்டுமென்றே லஞ்ச ஒழிப்பு போலீசாரை ஏவி விட்டுள்ளது. எல்லோருக்கும் பொதுவானவராக செயல்படுவதாக மு.க.ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் பழிவாங்குகிறார் என்று கூறினார்.