கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் 2வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ..!

நாதே கவுண்டன்புதூர் மேற்கு தொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டுத்தீ, இரண்டாவது நாளாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈட்டுபட்டுள்ள வனத்துறையினர்.

கோயமுத்தூர் வன கோட்டத்திற்கு உட்பட்ட மதுக்கரை வனச்சரகத்திலுள்ள நாதே கவுண்டன்புதூர் அருகே உள்ள மலையில் நேற்று காட்டுத்தீ ஏற்பட்டது.

போலாம்பட்டி பிளாக் II அடர்வனப்பகுதியிலுள்ள காய்ந்த புற்கள் நிறைந்த 50 ஹெக்டேர் பரப்பளவில் தரிசு பாறையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் 40 பேர் கொண்ட தீயணைப்பு குழுவினர் கடந்த இரண்டு நாளாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

செங்குத்தான பகுதி என்பதால் பாறைகள் அதிகம் உள்ள காட்டுப்பகுதியில் தீ பற்றி எரிகிறது.

தற்போது தீயணைக்கும் குழுவினர் கீழ்மலை மற்றும் மேல்பகுதியில் காட்டுத்தீ பரவாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாறைப் பகுதியானது சுமார் 150 ஹெக்டேர் நிலப்பரப்பாகும், இதில் சுமார் 50 ஹெக்டேர் பரப்பளவு ஏற்கனவே எரிந்துள்ளது.

பாறைகள் நிறைந்த பகுதிக்கு செல்ல முடியாததால், பாறைகள் நிறைந்த பகுதியில் தீ பரவுவதை உடனடியாக கட்டுப்படுத்த முடியவில்லை. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் வனத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். காட்டுத்தீயை கட்டுப்படுத்த ஆட்சியர் நடவடிக்கை எடுக்க இருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.