தொடர்ந்து 4 வது நாளாக லாரிகளை சிறை பிடிக்கும் விவசாயிகள்.!!

ல்லடம் : பல்லடம் அருகே, கனிம வள கடத்தலுக்கு எதிராக, தொடர்ந்து நான்காவது நாளாக, விவசாயிகள் லாரிகளை சிறைபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஒன்றியம், சுக்கம்பாளையம் கிராமத்தில் இருந்து கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவதாக, விவசாயிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து, கிராம சாலைகள் வழியாக கனிம வளங்கள் எடுத்து செல்லும் டிப்பர் லாரிகளை, விவசாயிகள் தொடர்ந்து சிறை பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்து வருகின்றனர்.கடந்த மூன்று நாட்களில், ஆறு லாரிகளை சிறைபிடித்ததில், 3.34 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. கனிம வள கடத்தலை கண்டித்து, பல்லடம் தாலுகா அலுவலகத்தில் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ளது. இதற்கிடையே, விவசாயிகளின், லாரிகள் சிறை பிடிப்பு போராட்டம் நேற்றும் தொடர்ந்தது.

பல்லடம் வேலம்பாளையம் மற்றும் காளிவேலம்பட்டி வழியாக சென்ற ஐந்து டிப்பர் லாரிகள் சிறை பிடிக்கப்பட்டன. இதில், 18 வீல்களுடன் அதிக பாரம் ஏற்றி வந்த கேரள பதிவு எண் கொண்ட லாரியும் ஒன்று. விவசாயிகளின், இந்த தொடர் போராட்டம் காரணமாக, அபராதம் விதிக்கப்படுவது ஒரு புறமிருக்க, போலீசாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த விஷயத்தில், ஒரு நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும்..