சுருளி அருவிக்கு சுற்றுலா வந்த போது நடந்த விபரீதம்… மரக்கிளை முறிந்து விழுந்து சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு..!

ம்பம்: சுருளி அருவி அருகே மரக்கிளை ஒடிந்து விழுந்ததில் சிறுமி உயிரிழந்தார். இதையடுத்து அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத் துறை தடை விதித்துள்ளது.

சென்னை நீலாங்கரை வடக்கு பாண்டியன் சாலையைச் சேர்ந்தவர் நிக்சன்(47). கார் ஓட்டுநர். இவரது மகள் பெமினா (15). நேற்று முன்தினம் குடும்பத்துடன் தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவிக்கு சுற்றுலா வந்திருந்தனர். பின்பு அருவியிலிருந்து வனத் துறை நுழைவு வாயில் பகுதிக்கு நடந்து வந்தபோது, அங்கிருந்த மரத்தின் பெரிய கிளையொன்று முறிந்து பெமினா தலையில் விழுந்தது.

இதில் அவர் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து சுருளி அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், காய்ந்த மரக்கிளைகள் வெட்டி அகற்றப்படுவதுடன், பயணிகளுக்கான பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப்பணிகள் முடிவடைந்ததும் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர் என்று கூறினார். வனத் துறையினரின் திடீர் அறிவிப்பால் நேற்று அருவியில் குளிக்க வந்திருந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.