ரூ.10 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு – கோவை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை.!!

கோவை மாநகராட்சி சார்பில் நகரின் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் கோவை மேட்டுப்பாளையம் ரோடு பஸ் நிலையம் எதிரே பஸ் நிறுத்த நிழற்குடை அமைக்கப்பட உள்ளது .இதற்காக எம்ஜிஆர் மார்க்கெட் அருகே இருந்த 4 ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி மாநகராட்சியின் நகரமைப்பு பிரிவு மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மேற்பார்வையில் பொக்லைன் மூலம் அந்த 4 ஆக்கிரமிப்பு கடைகளையும் இடித்து அகற்றும் பணி நடந்தது . அந்த இடத்தில் விரைவில் பஸ் நிறுத்த நிழல் குடை அமைக்கும் பணி நடைபெறும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். கோவை ஆர் .எஸ் .புரம், பாசியக்காரலு வீதி பகுதியில் மாநகராட்சி நிலம் 40 சென்ட் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் 20 சென்ட் நிலம் மாநகராட்சி சொந்தமானது என்று தீர்ப்பு கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து 20 சென்ட் நிலத்தை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டனர். அங்கு மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என்ற தகவல் பலகை வைக்கப்பட்டது . அந்த நிலத்தில் மதிப்பு ரூ 10 கோடி இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் மீதம் உள்ள 20 சென்ட் நிலத்தை மீட்க நீதிமன்ற மூலம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதிகாரிகள் தெரிவித்தனர்..