நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்யுங்கள்.. ஆர்எஸ்எஸ்ஸுக்கு சென்னை ஹைகோர்ட் நீதிபதி அட்வைஸ்..!!

சென்னை: தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊர்வலகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டும் காவல் துறை அனுமதி மறுத்த நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்ய ஆர்எஸ்எஸ் வழக்கறிஞருக்கு சென்னை ஹைகோர்ட் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் 51 இடங்களில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சார்பில் அக்டோபர் 2ஆம் தேதி அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரி தமிழக உள்துறை அமைச்சகம் மற்றும் டிஜிபியிடம் கடந்த மாதம் அந்த அமைப்பு சார்பாக மனு அளிக்கப்பட்டது.

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆவது ஆண்டு , அம்பேத்கரின் பிறந்தநாள் நூற்றாண்டு, விஜய தசமி உள்ளிட்டவற்றை முன்னிட்டு இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு தமிழக போலீஸ் அனுமதி அளிக்கவில்லை.

இதையடுத்து சென்னையை சேர்ந்த சுப்பிரமணியன் , கடலூரை சேர்ந்த சண்முகசுந்தரம், ஈரோட்டை சேர்ந்த செந்தில்நாதன் உள்ளிட்ட 9 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கில் நீதிபதி ஜி.கே. இளந்திரையன், அக்டோபர் 2ஆம் தேதி ஆர்எஸ் எஸ் ஊர்வலகத்திற்கு செப்டம்பர் 28க்குள் அனுமதி வழங்க வேண்டும் என காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊர்வலகத்திற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்துவதற்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. தற்போதைய சூழலில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க எந்த ஊர்வலங்கள், பேரணிகளுக்கு அனுமதி கொடுக்க முடியாது என அறிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழக முழுவதும் ஆர் எஸ் எஸ் அணி வகுப்புக்கு அனுமதி மறுத்துள்ளதாக கூறி ஆர் எஸ் எஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று முறையீடு செய்யப்பட்டது. நீதிபதி இளந்திரையன் முன் ஆஜரான ஆர் எஸ் எஸ் தரப்பு வழக்கறிஞர்கள், கடந்த 22 ஆம் தேதி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யும் வகையில் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி அளிக்க வேண்டும் என்றும் மற்ற கட்சியினர் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதியளிக்கும் நிலையில், தங்கள் அணிவகுப்பு அனுமதி மறுக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்யுங்கள் என ஆர்எஸ்எஸ் வழக்கறிஞருக்கு அறிவுரை வழங்கினார்.