முதல்வர் ஸ்டாலினுக்கு சட்ட ஒழுங்கு பற்றி எல்லாம் கவலை இல்லை… பாஜக வளர்ந்து விட்டதே என்று கவலைதான் – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு..!

திமுகவும் அதன் துணை அமைப்புக்குகளும் அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி பாஜகவின் வளர்ச்சியை தடுக்க பார்க்கின்றனர்!

அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. மேலும் காவல்துறையினர் அதற்கான நெறிமுறைகளை வகுத்து ஆர்எஸ்எஸ் சார்பில் வழங்கப்பட்ட மனுவின் மீது பரிசீலனை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியது. இந்நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணம் காட்டி இன்று அனுமதி மறுத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டது. இதனை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதே வேளையில் காவல்துறையின் சார்பில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்ட தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய சீராய்வுமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பேட்டியளித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறுகையில் “இன்று தமிழக காவல்துறை சட்ட ஒழுங்கு பிரச்சனை காரணம் காட்டி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது என அறிவித்து இருக்கிறது. திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் அவர்களின் பல்வேறு துணை அமைப்புகள் சேர்ந்து எப்படியாவது ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் வளர்ச்சி தமிழகத்தில் தடுத்து நிறுத்திட வேண்டும். அதற்காக தங்கள் அரசியல் அதிகாரத்தை பயன்படுத்த முடியுமா என்று பார்க்கின்றனர். ஆர்எஸ்எஸ் அணிவகுப்பிற்கு தடை விதித்ததை சட்டபூர்வமாக எதிர்கொள்வோம்.

கடந்த ஒரு வார காலமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகளின் கைது மற்றும் அந்த அமைப்பு தடை செய்யப்பட்ட பின்பு பாஜக நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்படுகிறது. கட்சிக் கூட்டத்திற்கு வந்து செல்லும் பொது மக்களை பின் தொடர்ந்து அவர்களின் வீடுகளிலும் பெட்ரோல் குண்டு வீசப்படுகிறது.

இதைப் பற்றி தமிழக முதல்வர் ஸ்டாலின் எந்த இடத்திலும் கண்டன அறிக்கை விடவில்லை. அவருடைய கவலை எல்லாமே தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக வளர்ந்த விடக்கூடாது என்பதே தவிர சட்ட ஒழுங்கு பற்றி அவருக்கு கவலை இல்லை.

விடுதலைச் சிறுத்தைகள் எதற்கு இந்த வருடம் புதிதாக பேரணி நடத்துகின்றனர். தமிழக அரசு விடுதலைச் சிறுத்தைகளை பேரணி நடத்த தூண்டிவிட்டு அதை காரணம் வைத்து ஆர் எஸ் எஸ் அணி வகுப்புக்கு தடை விதிக்க சதி திட்டம் தீட்டியுள்ளனர் என பாஜக எம்எல்ஏ வானதி  சீனிவாசன் பேட்டி அளித்துள்ளார்.