சாதிவாரி கணக்கெடுப்பு வேறு, வன்னியர் உள்ஒதுக்கீடு வேறு: அன்புமணி ராமதாஸ் பேட்டி

சாதிவாரி கணக்கெடுப்பிற்கும், வன்னியர் உள்ஒதுக்கீட்டிற்கும் சம்பந்தம் கிடையாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஏப்ரல் 21-ம் தேதியுடன் முடிவடைந்து, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டால் மீண்டும் 6 மாதங்களில் கூட்டப்பட வேண்டும். அக்டோபர் 9-ம் தேதி சட்டப்பேரவை கூடுவதாக, கடந்த மாதம் 20-ம் தேதி சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். அதன்படி, சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று கூடியது.

முன்னதாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்தார். 10.5% இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக அன்புமணி இராமதாஸ் தலைமையில் பாமக நிர்வாகிகள் முதலமைச்சரிடம் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அன்புமணி ராமதாஸ், ‘10.5% இட ஒதுக்கீடு தொடர்பாக சட்டம் கொண்டு வர முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம். பேசி முடிவெடுக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

தீர்ப்பு வழங்கப்பட்டு ஒன்றரை வருடங்களாகிறது. இதுவரை பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையம் எந்த பரிந்துரையும் அரசிடம் கொடுக்கவில்லை. 10.5% இட ஒதுக்கீடு சட்டம் கொண்டு வருவார்களா என்ற சந்தேகம் உள்ளது. தரவுகளை சேகரித்து வருவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்காக பல போராட்டங்கள் நடத்தப்பட்டது. உயிர் தியாகங்களை தொடர்ந்தே அவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்தது. இதை சாதிப் பிரச்னையாக பார்க்கக்கூடாது. சமூக நீதிப் பிரச்னையாக பார்க்க வேண்டும். வன்னியர் சமுதாயம் வளர்ந்தால், சமுதாயம் வளர்ச்சி பெறும்.

சாதி வாரி கணக்கெடுப்பிற்கும், வன்னியர் உள் ஒதுக்கீட்டிற்கும் சம்பந்தம் கிடையாது. தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு பாதுகாக்கப்பட வேண்டும். 45 நாட்களில் ரூ.500 கோடி செலவில் பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியுள்ளனர். சமூக நீதி பேசும் திமுக, தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். சமூக நீதியை பேசினால் போதாது, செயல்பாட்டில் காட்ட வேண்டும்.

காவிரியில் அமைந்துள்ள கர்நாடக அணைகள், மேட்டூர் அணையை காவிரி மேலாண்மை ஆணையத்தின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரவேண்டும். காவிரி விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானங்கள் போட்டால் போதாது. சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.