இன்று குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: நாடாளுமன்றத்தில் ஏற்பாடுகள் தீவிரம்-யார்க்கு வெற்றி.. பொறுத்திருந்து பார்ப்போம்..!

டெல்லி: நாட்டின் 14வது குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.

நாட்டின் புதிய குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மு அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிகாலம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் ஆகஸ்ட் 6ம் தேதியான இன்று குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான ஏற்பாடுகள் நாடாளுமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜூலை 6 ஆம் தேதி தொடங்கிய குடியரசுத் துணைத் தலைவருக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூலை 19 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜக்தீப் தன்கர் போட்டியிடுகிறார்.. அதேபோல் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக கர்நாடகாவைச் சேர்ந்த மார்கரெட் ஆல்வா போட்டியிடுகிறார்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளைச் சேர்ந்த 790 உறுப்பினர்கள் வாக்களிப்பர். குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குச்சீட்டில், போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்று இருக்கும். ஆனால் எந்தக் கட்சியின் சின்னமும் இடம்பெறாது. அந்த வாக்குச்சீட்டில் இரு பகுதிகள் இருக்கும். அதில் ஒரு பகுதியில் வேட்பாளர்களின் பெயர்கள் இருக்கும். மற்றொரு பகுதியில் யாரைத் தேர்வு செய்ய விருப்பமோ, அவர்களை வரிசைப்படுத்தி எண்களைக் குறிப்பிட வேண்டும்.

இன்று காலை 5 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்னர் வாக்கு எண்ணிக்கை மாலையே நடத்தப்பட்டு அறிவிக்கப்படும். புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் குடியரசு துணைத் தலைவர் வரும் ஆகஸ்ட் 11ம் தேதி பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பி-க்கள் மற்றும் நியமன எம்.பிக்கள் வாக்களிப்பார்கள். மொத்தமுள்ள 775 எம்பி-க்களில் 388 எம்பி-க்கள் வாக்களித்தால் குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க முடியும். பாஜக கூட்டணி வசம் 395 எம்.பிக்கள் இருக்கிறார்கள். மார்கரெட் ஆல்வாவுக்கு ஆம் ஆத்மி, தெலங்கானா ராஷ்டிர சமிதி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகள் ஆதரவளித்திருந்தாலும், தேர்தலில் பெரிய வித்தியாசம் ஏற்படாது. இதனால் பாஜக கூட்டணி வேட்பாளர் ஜக்தீப் தங்கர் வெற்றிபெறுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.