மீண்டும் கோவையை கேட்கும் மா.கம்யூனிஸ்ட் – மறுக்கும் திமுக… 2ம் கட்ட பேச்சு வார்த்தையும் தோல்வி.!!

சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் 2 தொகுதி தான் தருவோம். அதிலும் கோவை தொகுதி கிடையாது. அதற்கு பதில் வேறு தொகுதியை கேளுங்கள் என திமுக சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் கூறியதால் இன்று நடந்த 2ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீட்டில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தை பொறுத்தமட்டில் திமுக தனது கூட்டணி கட்சிகளும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கி நடத்தி வருகிறது.

ஏற்கனவே கடந்த 4ம் தேதி திமுக -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படவில்லை. கடந்த முறை திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை, கோவையில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. இந்த முறை மதுரை, கோவை உள்பட இன்னொரு தொகுதி என 3 இடங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டது.

ஆனால் திமுக தொகுதி பங்கீட்டு குழு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கையை ஏற்கவில்லை. இதையடுத்து மீண்டும் இன்று 2வது கட்டமாக சென்னை அண்ணா அறிவலாயத்தில் 2 கட்சிக தலைவர்கள் பேச்சுவார்த்தையை நடத்தினர். இன்றைய தினம் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் 2ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.

இன்று நடந்த பேச்சுவார்த்தையின்போது 2 தொகுதிகளை திமுக வழங்குவதாக கூறியுள்ளது. அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஓகே கூறியுள்ளது. அதேவேளையில் கடந்த 2019 தேர்தல் போலவே மீண்டும் மதுரை, கோவை தொகுதிகளை தரும்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுள்ளது. ஆனால் திமுக தரப்போ கோவை தொகுதியை இந்த முறை வழங்க முடியாது. மதுரை தொகுதியை வழங்குகிறோம். கோவைக்கு பதிலாக வேறு தொகுதியை கேளுங்கள் என உறுதியாக கூறியுள்ளது.

இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உடன்படவில்லை. கடந்த முறை கோவை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் அந்த தொகுதியை இந்த முறை விட்டு கொடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரும்பவில்லை. இதனால் இன்றைய தினம் திமுக-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே நடந்த 2 ம் கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது.

இத்தகைய சூழலில் தான் அடுத்தக்கட்டமாக விரைவில் திமுக-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே 3ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அதில் கோவை தொகுதியை மீண்டும் ஒருமுறை கேட்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. ஒருவேளை திமுக கோவை தொகுதியை மீண்டும் தர மறுத்தால் மயிலாடுதுறை, நாகை தொகுதிகளை கேட்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.