தேவாலயத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் -15 பேர் துடிதுடித்து கொல்லப்பட்டனர்.!!

புர்கினா பாசோ: தேவாலயம் ஒன்றில் சிறப்புப் பிரார்த்தனைக்காகப் பொதுமக்கள் ஒன்று கூடிய நிலையில், அங்கே பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலர் உயிரிழந்தனர்.

மேற்கு ஆப்பிரிக்கப் பகுதியில் உள்ள குட்டி நாடு புர்கினா பாசோ.. கடந்த பல ஆண்டுகளாகவே இந்த நாட்டில் உள்ளூர் மோதல் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் அங்கே அமைதியற்ற ஒரு சூழலே பல காலமாக நிலவி வந்தது.

வடக்கு புர்கினா பாசோவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை நடந்த பிரார்த்தனையின் போது கத்தோலிக்க தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட “பயங்கரவாத” தாக்குதலில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகத் தேவாலயத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து உள்ளூர் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிப்ரவரி 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைக்காகக் கூடியிருந்த எஸ்ஸகனே கிராமத்தை உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்துள்ளது. இதுவரை இந்த தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் இருவர் காயமடைந்தனர்” என்று அதில் கூறப்பட்டுள்ளது..

இதற்கிடையே புர்கினா பாசோவில் அமைதி திரும்ப வேண்டும் என உள்ளூர நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ள நிலையில், சிலர் திட்டமிட்டு தங்கள் பகுதியை நாசம் செய்ய இந்தத் தாக்குதலை நடத்தியள்ளதக கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த பகுதியில் செயல்பாடும் ஜிஹாதிக் பயங்கரவாதிகள் இதுபோன்ற தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வரும் நிலையில், தேவாலயத்தின் மீதான இந்தத் தாக்குதலை அந்த பயங்கரவாத குழு நடத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கடந்த காலங்களிலும் இந்த பகுதியில் செயல்பட்டு வரும் பயங்கரவாதிகள் தேவாலயத்தின் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளனர். மேலும், ஒரு சமயம் சர்ச் மத குருவையும் அவர்கள் கடத்த முயன்றது குறிப்பிடத்தக்கது.

புர்கினா பாசோ என்பது ஆப்பிரிக்காவின் சஹேல் பிராந்தியத்தில் உள்ள ஒரு நாடாகும். கடந்த 2011 முதல் லிபியாவில் எப்போது உள்நாட்டுப் போர் தொடங்கியதோ அப்போதே இங்கும் வன்முறை அதிகரித்தது. இந்த பிராந்தியத்தின் வடக்கு பகுதியைக் கடந்த 2012இல் பயங்கரவாதிகள் கைப்பற்றினர். கடந்த 2015 முதலே புர்கினா பாசோ மற்றும் நைஜரில் பகுதியில் ஜிஹாதி பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2022ஆம் ஆண்டில் இங்கே கேப்டன் இப்ராஹிம் ட்ரேயர் ஆட்சியைக் கைப்பற்றினார். அதாவது ஒரே ஆண்டில் இரண்டு முறை ஆட்சி கவிழ்ப்பு நடந்தது. ஜிஹாதி வன்முறையை அடக்குவதில் அரசு தோல்வி அடைந்துவிட்டதாக மக்களுக்கு இருந்த அதிருப்தியே இந்த இரண்டு ஆட்சி கவிழ்ப்பிற்கும் காரணமாக இருந்தது.

புர்கினா பாசோவில் வன்முறை ஆரம்பித்தது முதலே இதுவரை சுமார் 20,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.