இல.கணேசன் குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்க நாளை சென்னை வருகிறார் மம்தா பானர்ஜி-முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு..!

சென்னை: மணிப்பூர் மாநில ஆளுநராகவும், மேற்கு வங்க மாநில பொறுப்பு ஆளுநராகவும் இருப்பவர் இல.கணேசன்.

அவரது அண்ணன் எல்.கோபாலனின் 80-வது பிறந்தநாள் விழா, வரும் 3-ம் தேதிசென்னையில் கொண்டாடப்படுகிறது. இதில் பங்கேற்குமாறு மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு, இல.கணேசன் அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்று, விழாவில் பங்கேற்பதற்காக மம்தா நாளை மாலை சென்னை வருகிறார்.

மேற்கு வங்க முந்தைய ஆளுநருடன் மோதல் போக்கை கடைபிடித்த மம்தா பானர்ஜி, தற்போது பொறுப்பு ஆளுநராக உள்ள இல.கணேசனுடன் நட்பு பாராட்டி வருகிறார். சென்னை வரும் மம்தா முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும்சில அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்கவுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘நாளை மாலை தமிழகத்துக்கு வரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்து பேச உள்ளார்’ என்று கூறப்பட்டுள்ளது.