மூதாட்டியை நூதன முறையில் ஏமாற்றி 4 பவுன் செயினை அபேஸ் செய்த வாலிபர்..!

கோவை மதுக்கரை அருகே உள்ள போடிபாளையத்தை சேர்ந்தவர் வஞ்சி கவுண்டர். இவரது மனைவி நஞ்சம்மாள் (வயது 72). இவர் அந்த பகுதியில் கடந்த 30 வருடங்களாக மளிகை கடை நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று நஞ்சம்மாள் உக்கடம் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்து நின்றார். அப்போது அங்கு மொபட்டில் வாலிபர் ஒருவர் வந்தார். அவர் மூதாட்டியிடம் உங்களை நன்றாக தெரியும். உங்களது கடையும் எனக்கு தெரியும் என்று பேச்சு கொடுத்தார். பின்னர் நானும் போடி பாளையம் தான் செல்கிறேன். வேண்டுமானால் வாருங்கள் உங்களை கொண்டு போய் விட்டு விடுகிறேன் என்று கூறினார். அதற்கு மூதாட்டியும் சம்மதம் தெரிவித்து வாலிபரின் மொபட்டில் ஏறினார்.

மூதாட்டிடம் பேசிக் கொண்டே சென்ற வாலிபர் பிரதமரின் பென்ஷன் திட்டம் ஒன்று உள்ளது. நீங்கள் விண்ணப்பித்தால் மாதமாதம் பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினார்.
பின்னர் மூதாட்டியிடம் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கூறினார். அப்போது அந்த வாலிபர் மூதாட்டியிடம் செயின் அணிந்து இருந்தால் பணம் கிடைக்காது எனவே செயினை கழற்றி கொடுங்கள் என்றார். மூதாட்டியும் தான் அணிந்து இருந்த 4 பவுன் செயினை கழற்றி ஒரு பேப்பரில் சுற்றி அந்த வாலிபரிடம் கொடுத்தார்.

பின்னர் அந்த வாலிபர் செயின் சுற்றி வைத்து இருந்த பேப்பரை மூதாட்டியிடம் கொடுத்துவிட்டு, ஸ்டாம்ப் பேப்பர் வாங்கிட்டு வருகிறேன் என கூறி விட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அந்த வாலிபர் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மூதாட்டி செயின் சுற்றி இருந்த பேப்பரை திறந்து பார்த்தார். ஆனால் அதில் செயின் இல்லை. அதற்கு பதிலாக கற்கள் இருந்தது.
அதன் பின்னர் வாலிபர் தன்னை நூதன முறையில் ஏமாற்றியதை உணர்ந்த மூதாட்டி  போத்தனூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி நூதன முறையில் மூதாட்டியை ஏமாற்றிய வாலிபரை தேடி வருகிறார்கள்.