அடடா!! அடிபம்புடன் சேர்த்து அமைக்கப்பட்ட சாலை… என்ன காரணம்..? – அதிகாரிகள் விளக்கம்..!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ளது சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி. இந்த பேரூராட்சியில் உள்ள 12-வது வார்டில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதி மக்கள் பயன்படுத்துவதற்கு வசதியாக சாலை ஒன்று இருந்தது. ஆனால் அந்த சாலை கடந்த சில மாதங்களாகவே பழுதடைந்து காணப்பட்டது. இதனால் வாகன விபத்துக்கள் ஏற்பட்டதோடு, பொதுமக்கள் நடந்துசெல்ல முடியாத நிலையும் இருந்தது. இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் சாலை அமைத்து தர வேண்டும் என பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, பேரூராட்சி அதிகாரிகள் சூளேஸ்வரன்பட்டி பகுதிக்கு சென்று 12-வது வார்டு பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் சாலையை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து சாலை சீரமைக்கும் பணிக்காக ஒப்பந்தம் கோரப்பட்டு, ஒப்பந்ததாரர்களும் சாலை சீரமைப்பதற்கான பணியை எடுத்தனர். அதன்மூலம் அந்த பகுதியில் சாலை சீரமைப்பு பணி நடந்து வந்தது. தற்போது பணிகள் அனைத்தும் முடிந்து விட்டது. இந்த நிலையில் சாலை அமைத்தவர்கள் அந்த பகுதியில் இருந்த அடிபம்புடன் சேர்த்து சாலை அமைத்து விட்டனர். இதனை சிலர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அது வாட்ஸ்-அப், பேஸ்புக்கில் மிகவும் வைரலாகியது.

இதுகுறித்து பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள் கூறும்போது, 12-வது வார்டில் உள்ள அடிபம்பு பழுதடைந்து மக்களுக்கு பயன்படாமல் இருந்தது. அப்போது மக்கள் சாலை அமைக்க வேண்டும் என கேட்டனர். சாலை அமைக்கும் போது அடிபம்பை அகற்றினால், அங்கு குழி ஏற்பட்டு விடும். அதனால் அடிபம்பையும் சேர்த்து சாலை அமைத்து விட்டோம். வேண்டும் என்று செய்யவில்லை. மக்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் செய்தோம். இன்று அடிபம்பை அகற்றி விட்டு, அதற்கான பைப்புகள் அமைக்கும் பணி நடக்கிறது. இன்று பணி முடிந்து விடும் என்றனர்.