வந்தாச்சு தீபாவளி… போலாமா ஊருக்கு… என சொல்லும் மக்களுக்காக… கோவையில் இருந்து சிறப்பு பஸ்கள்- கூட்ட நெரிசலை தவிர்க்க தற்காலிக பஸ் நிலையம் ரெடி..!!

கோவை மாவட்டத்தில் சிறு,குறு தொழில் நிறுவனங்கள், ஐ.டி.நிறுவனங்கள், நூற்பாலைகள், என எண்ணற்ற தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு வெளி மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, திருச்சி, மதுரை, திண்டுக்கல், சேலம், ஈரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள்.இதுதவிர கோவையில் ஏராளமான கல்லூரிகளும் உள்ளன.இங்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் விடுமுைற நாட்கள் மற்றும் விழாக்காலங்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதனால் கோவையில் உள்ள காந்திபுரம் மத்திய பஸ் நிலையம், திருவள்ளுவர் பஸ்நிலையம், சிங்காநல்லூர் பஸ் நிலையங்களில் இருந்து இயக்கப்படும் பஸ்களில் கூட்டம் அலைமோதும். கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்படும்.
இன்னும் 11 தினங்களில் தீபாவளி பண்டிகை வர உள்ளது. தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக கோவையில் தங்கி வேலை பார்த்து வரும் அனைவரும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். தற்போதே பலரும் ரெயில்கள், பஸ்களில் முன்பதிவு செய்து ஊருக்கு செல்ல தயாராகி விட்டனர். அனைத்து பஸ்களிலும் முன்பதிவு முடிந்து விட்டது. தற்போது தமிழக அரசு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பஸ்களை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது. அந்த வகையில் கோவை மாவட்டத்தில் இருந்தும் சிறப்பு பஸ்களை இயக்குவதற்கான நடவடிக்கைகளில் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் சிலர் கூறும் போது, தீபாவளி பண்டிகைையயொட்டி கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், கோவையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
கோவை மாவட்டத்தில் இருந்து நெல்லை, மதுரை, தூத்துக்குடி, திருச்சி, கன்னியாகுமரி, சேலம், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கான நடவடிக்கை நடந்து வருகிறது. இதுதவிர மாநகரில் போக்குவரத்து நெரிசல் மற்றும் கூட்ட ெநரிசலை தவிர்க்கும் பொருட்டு, தற்காலிக பஸ் நிலையம் அமைத்து சிறப்பு பஸ்களை இயக்குவது ெதாடர்பாக ஆலோசனையும் நடந்து வருகிறது. ஆலோசனையில் கோவையில் எங்கு தற்காலிக பஸ் நிலையம் அமைக்கலாம் என்பது குறித்து விவாதிக்கப்படுகிறது. விரைவில் அதற்கான இடங்களை தேர்வு செய்து ஆய்வு செய்யவும் உள்ளோம் என்றனர்.
கோவை கிரகாஸ்கட் ரோடு, 100 அடி சாலை, ஒப்பணக்கார வீதி, பெரிய கடைவீதி, காந்திபுரம், டவுன்ஹால் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதையடுத்து அங்கு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் சாதாரண உடை அணிந்து மக்களுடன் மக்களாக கலந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதுதவிர கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி நடக்கிறது. தீபாவளி பண்டிகையை யொட்டி மாவட்டம் முழுவதும் 1500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.