வாட்ஸ் அப்பில் தொடர்ந்து தொல்லை… பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது மேலும் ஒரு பெண் பரபரப்பு புகார்..!

சென்னை: பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவால் பாதிக்கப்பட்ட பெண்கள் அவர் மீது தைரியமாக புகார் கொடுக்கலாம் என்றும் புகார் அளிப்பவரின் ரகசியம் காக்கப்படுமெனவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்து இருந்த நிலையில், அவர் மீது மேலும் ஒரு இளம்பெண் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள பாத்திமாநகர் பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ (வயது 29). பாதிரியாரான இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சில ஆலயங்களில் பாதிரியாராக பணியாற்றி உள்ளார். பெனடிக் ஆன்றோ இளம்பெண்கள் சிலருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடந்த சில வாரங்களுக்கு முன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிரியாரின் லீலைகள் என்ற பெயரில் இளம்பெண்களுடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள், வாட்ஸ் அப் காலில் நிர்வாணமாக பேசிய காட்சிகள் என முகம் சுளிக்கும் வகையில் பல காட்சிகள் இடம் பெற்று இருந்தது. இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துவதுமாக இருந்தது.

பாதிரியார் பெனடிக் ஆன்றோ ஆலய பணிக்காக மதுரை, சென்னை, பெங்களூர் என பல இடங்களுக்கு சென்று வந்ததும் அங்கு வரும் இளம்பெண்களை மயக்கி தனது வலையில் வீழ்த்தியதும் அவர்களையும் மிரட்டியதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில், பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்த ஒரு நர்சிங் மாணவி ஒருவர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது புகார் அளித்தார். தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பாதிரியார் மீது அளித்த புகாரில் தெரிவித்து இருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் பாதிரியார் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கினர். இதையடுத்து பாதிரியார் பெனடிக் ஆன்றோ தலைமறைவானர். அவரை தனிப்படை போலீசார் பாதிரியார் பெனடிக் ஆன்றோவை கைது செய்தனர். பாளையங்க்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் பாதிரியார் பெனடிக் ஆன்றோ மீது மேலும் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் ஒரு பெண், பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் 2022 ஆம் ஆண்டு பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவுடன் வாட்ஸ் அப் மூலம் சாட்டிங் செய்தேன். ஆனால், அவரின் நடவடிக்கை எனக்கு பிடிக்கவில்லை. இதனால், நான் சாட்டிங் எதுவும் செய்யாமல் ஒதுங்கி கொண்டேன். எனினும் எனக்கு தொடர்ந்து பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ தொல்லை கொடுத்து வந்தார்” என்று கூறியுள்ளார். இந்த புகாரையடுத்து பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது கன்னியாகுமரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னதாக, பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவால் பாதிக்கப்பட்ட பெண்கள் அவர் மீது தைரியமாக புகார் கொடுக்கலாம் என்றும் புகார் அளிப்பவரின் விபரங்கள் ரகசியமாக காக்கப்படுமெனவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.