கக்கநல்லா-தொரப்பள்ளி இடையே தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணிகள் தீவிரம்..!

ஊட்டி: முதுமலை புலிகள் காப்பகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் வனப்பகுதியில் வறட்சியான காலநிலை நிலவுகிறது. தொடர்ந்து பசும் புற்கள் கருகி வருகிறது. இதனால் முதுமலை புலிகள் காப்பக பகுதிக்குள் உள்ள சாலைகளில் வாகனத்தில் பயணம் செய்யும் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை கவனக்குறைவாக வீசி செல்கின்றனர். இதனால் காய்ந்து கிடக்கும் புற்கள், செடி, கொடிகளில் எளிதில் தீ பரவி விடுகிறது. தொடர்ந்து காட்டுத்தீயாக உருமாறி விடுகிறது. இதில் வனத்தில் உள்ள அரிய வகை தாவரங்கள், மரங்கள், சிறு வன உயிரினங்கள் எரிந்து விடுகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் தொடங்கும் சமயத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வனத்துறையினர் மக்கள் பயன்படுத்தும் சாலையோரங்களில் பல மீட்டர் அகலத்துக்கு தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.
கடந்த வாரம் மசினகுடி – ஊட்டி நெடுஞ்சாலையோரம் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியை வனத்துறையினர் தொடங்கினர். இதைத் தொடர்ந்து தமிழக- கர்நாடக எல்லையான கக்கநல்லா முதல் தெப்பக்காடு, கார்குடி, தொரப்பள்ளி வழியாக கூடலூர் வரும் தேசிய நெடுஞ்சாலையோரம் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பிட்ட தூரம் வரையறுத்து காய்ந்த புற்களை தீ வைத்து எரித்து பாதுகாப்பாக அணைப்பது தீத்தடுப்புக்கோடு ஆகும். இதில் தீப்பெட்டி குச்சிகள், புகையும் சிகரெட் துண்டுகளை வீசினால் எளிதில் தீ பிடிக்காது. இதன் மூலம் காட்டுத்தீ பரவாமல் வனப்பகுதியை பாதுகாக்க முடியும். இங்கு வரும் சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகள் வனத்தை பாதுகாக்க ஒத்துழைப்பு அளித்தால் வனத் தீ ஏற்படாமல் தடுக்கலாம்.