3 நாட்களாக வனத்துறையினருக்கு தண்ணி காட்டிய மக்னா யானை சிக்கியது ..!

கோவை கடந்த 3 நாட்களாக கோவையை கலங்கடித்த மக்னா யானையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். பின்னர் இந்த யானை அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது. மக்னா தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பெரியூர் ஈச்சம்பள்ளம் பகுதியில் விவசாய விளைநிலங்களுக்குள் புகுந்து மக்னா யானை ஒன்று அட்டகாசம் செய்தது. இந்த யானையை கடந்த 5-ந் தேதி வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் அதை லாரியில் ஏற்றி, கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள டாப்சிலிப் வரகளியாறு வனப்பகுதியில் விடப்பட்டது. இந்த யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். வனப்பகுதியை விட்டு வெளியேறியது இந்த நிலையில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய மக்னா யானை, கோழிக்கமுத்தி, செம்மனாம்பதி வழியாக குடியிருப்பு பகுதிக்குள் வந்தது. பின்னர் அங்கிருந்து மாரப்பகவுண்டன் புதூர், கோவிந்தனூர், ராமபட்டினம், வழியாக நடந்து கிணத்துக்கடவு அருகே வந்தது.
தொடர்ந்து அங்கிருந்து வழுக்குப்பாறை, மதுக்கரை வழியாக கோவை அருகே உள்ள பிள்ளையார் புரம் அருகே நேற்று முன்தினம் காலையில் வந்து தஞ்சம் அடைந்தது. இந்த யானையை வனத்துறையினர் மதுக்கரை வனப்பகுதிக்குள் துரத்த முயற்சி செய்தனர். சுற்றுச்சுவரை உடைத்து அட்டகாசம் ஆனால் அந்த யானை, வனப்பகுதிக்குள் செல்லாமல் குடியிருப்பு பகுதியையே சுற்றி வந்து வனத்துறையினருக்கு போக்கு காட்டியது. அத்துடன் அந்த பகுதியில் உள்ள சுற்றுச்சுவரையும் உடைத்து அட்டகாசத்தில் ஈடுபட்டது. மேலும் அங்கு திரண்ட பொதுமக்களையும் துரத்தியது. இதையடுத்து இரவு நேரத்தில் வீட்டை விட்டு பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். அத்துடன் 100-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் அந்த மக்னா யானையை கண்காணித்துக்கொண்டே இருந்தனர். மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் பிள்ளையார் புரம் பகுதியில் இருந்து வெளியேறிய மக்னா யானை, பி.கே.புதூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் சுற்றுச்சுவரை உடைத்து அட்டகாசம் செய்ததுடன், சாலையை கடந்து, செங்குளம் வழியாக புட்டுவிக்கி பாலம், நொய்யல் ஆறு பகுதியில் சுற்றியது.
பின்னர் அங்கு இருந்து இடம்பெயர்ந்து பேரூர் பகுதியை நோக்கி சென்ற யானை, அந்த பகுதியில் உள்ள தோட்டங்களில் நேற்று காலை முகாமிட்டது. தொடர்ந்து வனப்பகுதிக்குள் செல்லாமல் குடியிருப்பு பகுதியை நோக்கியே இந்த யானை சுற்றி வந்ததால் மயக்க ஊசி செலுத்தி பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வனத்துறையினர் முடிவு செய்தனர். மருத்துவக்குழுவினர் தயார் இதற்காக கோழிக்கமுத்தி முகாமில் இருந்து கும்கி யானையான சின்னதம்பி வரவழைக்கப்பட்டது. அந்த யானை நேற்று காலை 9 மணிக்கு கோவை வந்தது. அத்துடன் தர்மபுரியில் இந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்த குழுவினரும் கோவை வரவழைக்கப்பட்டனர். அதுபோன்று கோவை மண்டல வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியம் மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். தொடர்ந்து கும்கி யானை சின்னதம்பி, வனத்துறை கால்நடை டாக்டர்கள் சதாசிவம், பிரகாஷ், சுகுமாறன் மற்றும் ஓய்வு பெற்ற டாக்டர் மனோகரன் உள்பட பலர் கொண்ட மருத்துவக்குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். ஆனால் அந்த யானை, தோட்டப்பகுதிக்குள் செல்வதும், வெளியே வருவதுமாக இருந்தது.
இந்த நிலையில் செல்வபுரம் சோதனை சாவடி அருகே உள்ள தனியார் கல்லூரிக்கு பின்புறத்தில் இருக்கும் ஒரு தோட்டத்தில் நின்ற மக்னா யானைக்கு மாலை 4 மணியளவில் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தப்பட்டது. இதை தொடர்ந்து வனத்துறையினர் கும்கி யானை சின்னதம்பி உதவியுடன், அந்த யானையின் கால்களை கட்டி வெளியே கொண்டு வந்தனர். பின்னர் 3 பொக்லைன் எந்திரங்களின் உதவியுடன் அந்த யானையை லாரியில் ஏற்ற முயற்சி செய்தனர்.
இருந்தபோதிலும் அந்த யானை லாரியில் ஏறாமல் லாரி அருகே நின்று கொண்டு இருந்தது. பின்னர் நீண்ட நேர முயற்சியால் மெதுவாக மக்னா யானை லாரியில் ஏறியது. உடனே அங்கு குவிந்து இருந்த பொதுமக்கள் கைகளை தட்டி வனத்துறையினருக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர். பின்னர் வனத்துறையினர் அந்த யானையை மேட்டுப்பாளையம் அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவதற்காக கொண்டு சென்றனர். இதன் காரணமாக குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து கடந்த 3 நாட்களாக கோவையை கலங்கடித்த மக்னா யானை பிடிபட்டதால் வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

மக்னா யானை பிடிப்பட்டது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:- கோவையில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மக்னா யானை வனப்பகுதிக்குள் செல்லாமல் தொடர்ந்து போக்கு காட்டி வந்தது. தொடர்ந்து அந்த யானை குடியிருப்பு பகுதியையே சுற்றி சுற்றி வந்து அட்டகாசத்தில் ஈடுபட்டதால், மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து அந்த யானையை கண்காணிக்க ரேடியோ காலர் பொறுத்தப்பட்டு உள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் அதை விட்டாலும் அந்த யானை எந்த பகுதிக்கு செல்கிறது என்பது குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.