கர்நாடகாவில் தேர்தல் பேரணியில் பணத்தை அள்ளி வீசிய காங்கிரஸ் தலைவர் சிவக்குமார்..!

ர்நாடகாவில் தேர்தலை ஒட்டி பேரணியின் போது காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் மக்களிடம் பணத்தை அள்ளி வீசிய வீடியோ வைரலாகி வருகிறது.

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவு பெறும் நிலையில் சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

மோடி குறித்து பேசிய அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்ட நிலையில் மக்களவை செயலகத்தால் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்னிந்தியாவில் நேரடியாக பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலமான கர்நாடகாவில் மே மாதத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் கட்சியே அங்கு ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் 124 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளை காங்கிரஸ் கட்சி முடுக்கிவிட்டுள்ளது.

படித்த இளைஞர்களை கவரும் வண்ணம் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் பட்டதாரிகளுக்கு மாதம் 3000 ரூபாய் உதவித்தொகையும் டிப்ளமோ படித்தவர்களுக்கு மாதம் 1500 ரூபாய் உதவித்தொகையும் வழங்கும் யுவநிதி திட்டமும், குடும்ப தலைவிகளின் ஆதரவை பெறும் நோக்கில் ‘க்ருஹ லக்ஷ்மி’ என்ற திட்டத்தின் படி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2,000 ரூபாய் நிதி உதவி திட்டத்தையும் காங்கிரஸ் அறிவித்துள்ளது. மேலும் ‘க்ருஹ ஜோதி’ என்ற திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் ‘அன்ன பாக்யா’ என்ற திட்டத்தில் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் 10 கிலோ அரிசி வழங்கப்படும் என்றும் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இந்நிலையில் அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இதன் ஒரு பகுதியாக மாண்டியாவில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது திரண்டிருந்த மக்கள் மீது டி.கே.சிவக்குமார் 500 ரூபாய் பணத்தை அள்ளி வீசும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறி வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை 11.30 மணியளவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.