அதிமுக-பாஜக இடையே தொடரும் கருத்து மோதல் : ஜெ.பி. நட்டா இன்று தமிழ்நாடு வருகை..!

மிழ்நாட்டில் 10 மாவட்ட அலுவலகங்களை திறக்கும் நிகழ்ச்சிகளில் பாஜகவின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா இன்று பங்கேற்க இருக்கிறார்.
தமிழ்நாடு பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் நிர்மல் குமார், அக்கட்சியிலிருந்து விலகி அதிமுக-வில் இணைந்தார். இதனைத்தொடர்ந்து, அதிமுக-பாஜக இடையே கருத்து மோதல் நீடித்து வருகிறது. மேலும், தன்னை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார். இதற்கு அதிமுக தலைவர்கள் கடும் விமர்சனங்களை வைத்தனர். டெல்லியில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு வரும் நட்டா,அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கிருஷ்ணகிரி சென்று அங்கு மாவட்ட கட்சி அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.பின்னர் அங்கிருந்தபடியே காணொலி காட்சி வாயிலாக புதுக்கோட்டை, திருச்சி, தேனி, தருமபுரி, விழுப்புரம் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் கட்சி அலுவலகங்களை அவர் திறந்து வைக்கிறார்

இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், சி.டி .ரவி உள்ளிட்டோர் பங்கேற்க இருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து பெங்களூரு செல்லும் நட்டா, கர்நாடக சட்டமன்ற தேர்தல் குறித்து பொறுப்பாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

தமிழ்நாட்டில் பாஜக – அதிமுக கூட்டணியில் தற்போது வார்த்தை போர் முற்றி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவின் தமிழ்நாடு வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.