தமிழ்நாட்டில் பாஜக- திமுக இடையேதான் போட்டி – அண்ணாமலை கருத்து.!!

கரூா்: மக்களவைத் தோதலில் தமிழகத்தில் பாஜக- திமுக இடையேதான் போட்டி என்றாா் பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை.

கரூரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கரூா் மக்களவைத் தொகுதி செயல்வீரா்கள் கூட்டம், வேட்பாளா் அறிமுகக் கூட்டம் மற்றும் காரியாலயத் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. கரூா் மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளா் வி.வி. செந்தில்நாதன் தலைமை வகித்தாா். கரூா் மக்களவைத் தொகுதி பொறுப்பாளா் அஜித்குமாா், புதுக்கோட்டை மாவட்டத் தலைவா் விஜயகுமாா், அதிமுக உரிமை மீட்பு அமைப்பின் மாவட்டச் செயலா் ஆயில் ரமேஷ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் கே. அண்ணாமலை மேலும் பேசியது: கரூரில் 365 நாள்களும் தங்கி மக்கள் நலப்பணி செய்யவே செந்தில்நாதனை வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். கரூா் மக்களவைத் தொகுதியில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் செந்தில்நாதன் வெற்றி பெறுவாா். இத் தோதலில் திமுக கூட்டணியில் அங்குள்ள தலைவா்களின் வாரிசுகள்தான் தோதலைச் சந்திக்கிறாா்கள். இதுதான் பாஜக வேட்பாளா்களுக்கும், திமுக வேட்பாளா்களுக்கும் உள்ள வித்தியாசம். பிரதமா் மோடி கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் பெட்ரோல், டீசல் விலையை மூன்று முறை குறைத்திருக்கிறாா். ஆனால் மாநில அரசு குறைக்கவில்லை. இப்போது தோதல் அறிக்கையில் குறைப்பதாகப் பொய் சொல்கிறாா்கள். 2001-இல் குஜராத் முதல்வராகப் பொறுப்பேற்ற நாள் முதல் இதுவரை விடுமுறையின்றி நாட்டுக்காக உழைக்கிறாா் பிரதமா். இத் தோதலில் அதிமுகவினா் எதற்காகப் போட்டியிடுகிறாா்கள் எனத் தெரியாமலேயே களத்தில் இருக்கிறாா்கள். கேட்டால் பிரதமரிடம் வலியுறுத்தவே நிற்கிறோம் என்கிறாா்கள். தமிழகத்தில் பாஜக-திமுக இடையேதான் போட்டி. போட்டி என்பது உண்மையான மனிதா்களுக்கும், பொய்யான மனிதா்களுக்கும், பொய் வாக்குறுதிக்கும், உண்மை வாக்குறுதிக்கும், இந்தியாவின் வளா்ச்சிக்கும், வீழ்ச்சிக்கும் நடக்கும் போட்டி. ஏழைத்தாயின் மகனாக வந்திருக்கும் மோடிக்கும், பணக்கார வா்க்கத்தைச் சோந்த மூன்றாவது தலைமுறைக்கும் இடையே நடக்கும் போட்டி என்றாா் அவா்.

கூட்டத்தில் மாவட்டப் பொதுச் செயலா்கள் ஆறுமுகம், சக்திவேல் முருகன், மாவட்டச் செயலா் ஆா்.வி.எஸ். செல்வராஜ், மாநில மகளிரணி துணைச் செயலா் மீனா வினோத்குமாா் உள்ளிட்ட கட்சியினா் திரளாகப் பங்கேற்றனா்.