உயிருக்குப் போராடும் நகைச்சுவை நடிகர் – உதவி கேட்டு கண் கலங்கி பேசிய போண்டா மணி..!

னது நகைச்சுவை மூலமாக மக்களை என்டர்டெயின் செய்தவர் நடிகர் போண்டா மணி. தற்போது, இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து ஓமந்தூரார் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருந்த அவரை நேரில் சந்தித்துப் பேசினோம்.

“ஒரு ஆறு மாதமாகவே உடல்நிலை சரியில்லாம இருந்தது. ஒப்புக்கொண்ட புராஜக்ட் எல்லாம் பண்ணனும்னு தொடர்ந்து ஓடிட்டே இருந்தேன். பருவக் காதல்னு ஒரு படத்தில் நடிச்சேன். அந்தப் படத்தில் சாக்கடையில் விழுகிற மாதிரி சீன் எடுத்தாங்க. அவங்க தத்ரூபமாகத் தெரியணும்னு நிஜ சாக்கடையில் என்னை விழ வச்சிருக்காங்க.

அந்த சாக்கடை தண்ணீர் உடம்புக்குள் போனதால நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டுச்சு. அந்தப் படப்பிடிப்பு தளத்திலேயே மூச்சுத்திணறி மயக்கமானேன். தொடர்ந்து சிகிச்சை எடுத்துட்டு வந்தேன். பத்து நாள் ரெஸ்ட் எடுத்துட்டு கமிட் பண்ணின வேலைகளை செய்யணும்னு பல ஊர்களுக்கு டிராவல் பண்ணினேன்.

அப்பப்ப மூச்சுத்திணறல் ஏற்பட்டுச்சு. ஓமந்தூரார் மருத்துவமனையில் நல்ல முறையில் சிகிச்சை பண்ணினாங்க. தொடர்ந்து மூச்சு விட சிரமப்பட்டுட்டே இருந்தேன். இப்ப சமீபத்தில் தான் ரெண்டு சிறுநீரகமும் செயலிழந்த விஷயம் தெரிஞ்சது. எல்லோரையும் சிரிக்க வைச்சேன். இறுதியாக, என் வாழ்க்கையில் எனக்கு இப்படி ஒரு துயரம் ஏற்பட்டதை தாங்கிக்க முடியல.

சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஃபோன் பண்ணி அடிக்கடி உடல்நலம் குறித்து விசாரிக்கிறார். நேர்ல என்னைப் பார்க்க வந்தார் . இப்ப இறுதியா சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தால் மட்டும்தான் கொஞ்ச நாளைக்கு வாழ முடியும்னு சொல்லியிருக்காங்க. முதலமைச்சர் மனசு வைச்சா அது முடியும்.. நான் எல்லோருடனும் நடிச்சிருக்கேன்.. எல்லோரும் எனக்கு கருணை காட்டுவாங்கன்னு நம்புறேன்! எனக்கு நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து உதவினா நல்லா இருக்கும்.

மயில்சாமி, பெஞ்சமின்னு என்னுடன் நடிச்ச நடிகர்கள் எல்லாரும் வந்து பார்த்துட்டு போறாங்க. வடிவேலு சாருடன் சேர்ந்த பிறகுதான் போண்டா மணின்னு ஒருத்தன் இருக்கான்னு வெளியில் தெரிய ஆரம்பிச்சேன். ஆனா, பெரிய அளவில் சொத்தெல்லாம் சேர்த்து வைக்கல. சொந்த வீடு கிடையாது, என் மனைவி மாற்றுத்திறனாளி. என் பொண்ணு பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறா.. பையன் பத்தாவது படிக்கிறான். அன்றாடம் நான் சம்பாதிச்சுக் கொடுக்கிற பணத்தை வச்சுத்தான் குடும்பம் நடத்திட்டு இருக்கோம். இன்னும் புள்ளைங்கல கரை சேர்க்கணும்.. அதுங்களுக்கு நான் எதுவுமே சேர்த்து வைக்கல.

அரசு மருத்துவமனைக்கு வந்ததால எனக்கு எந்த மருத்துவ செலவும் தேவைப்படல. நீர்க்குமிழி நாகேஷ் மாதிரி ஆகிடுச்சு என் வாழ்க்கை. எல்லாரையும் சிரிக்க வைச்சேன்.. என வருத்தப்பட்டவர் தொடர்ந்து பேசினார்.

அரசு மருத்துவமனையில் எந்தக் குறையும் இல்லாம கவனிச்சிக்கிறாங்க. சிறுநீரகம் ரெண்டும் செயலிழந்துட்டுன்னு சொன்னதும் குடும்பம் பதறிட்டாங்க. புள்ளைங்க எல்லாரும் துடிச்சிட்டாங்க. அவங்களுடைய பதற்றத்தை தான் என்னால தாங்கிக்க முடியல. நான் யாருக்கும் துரோகம் பண்ணினது கிடையாது. எல்லாருக்கும் உதவி பண்ணியிருக்கேன். எனக்கு ஏன் கடவுள் இவ்வளவு பெரிய வியாதியைக் கொடுத்தார்னு துடிச்சி போயிட்டேன்.

சிறுநீரகம் மாற்றணும் அப்படியில்லைன்னா டயாலிசிஸ் பண்ணனும்னு சொல்லியிருக்காங்க. சிறுநீரகம் மாற்ற பணம் வேணும்… எப்படியும் பத்து லட்சம் மேல தேவைப்படும். நடிகர் சங்கத்தில் என்ன பண்ணப் போறாங்கன்னு தெரியல. அவங்க ஏதாவது செய்யணும். சின்னத்திரை நடிகர் சங்கத்திலும் இருக்கேன். பார்க்கலாம்! என்றவரிடம் வடிவேலு தொடர்பு கொண்டு பேசினாரா எனக் கேட்டோம்.

இல்லை என்றவர் தொடர்ந்து பேசினார். கூட நடிச்ச நடிகர்கள் எல்லாரும் துடித்துப் போய் வந்து பார்த்துட்டு போனாங்க. செல் முருகன் கேள்விப்பட்டதும் இங்க வந்துப் பார்த்தார். விவேக் சார் உயிரோட இருந்திருந்தா நான் யார்கிட்டேயும் கை ஏந்த வேண்டிய அவசியமே வந்திருக்காது. அவரே ஓடிவந்து உதவியிருப்பார். அப்படிப்பட்ட நல்ல மனிதர். அதுக்கு எனக்கு கொடுத்து வைக்கல. அதே மாதிரி ஜே.கே ரித்தீஷ் அவர்கள் இருந்திருந்தாலும் எனக்காக உதவி பண்ணியிருப்பார் என கண் கலங்கியவர் தொடர்ந்து பேசினார்.

என் கூடப் பொறந்தவங்க எல்லாரும் சிலோனில் இருக்காங்க.. அவங்க இங்க வந்து சிறுநீரக தானம் கொடுக்கிற சூழல் இல்லை. என் மனைவி அவங்களுடைய கிட்னியைத் தரேன்னு சொல்றாங்க.. மருத்துவர்கள் அதுக்கு இன்னும் எந்த பதிலும் சொல்லலை!” என்றார்.