கோவை வடக்கு கோட்டாட்சியர் அலுவலகம் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்களில் கலெக்டர் சமீரன் திடீர் ஆய்வு..!

கோவைமாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள வடக்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலக பிரிவுகள், கணினி அறை பதிவேடுகள் அறை உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில் நிலுவையில் உள்ள பொதுமக்களின் விண்ணப்பங்கள் குறித்தும் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் குறித்தும் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் பணியாற்றும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து கவுண்டம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதி மற்றும் அதே பகுதியில் இயங்கி வரும் அரசு ஐடிஐ பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, விடுதிகளில் மாணவ -மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் அந்த விடுதிகளில் உள்ள சுகாதார நிலை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். இதேபோல் கோவை, மாநகராட்சியின் வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் சமீரன், வரி வசூல் தொடர்பாகவும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கோவை வடக்கு மண்டல அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட பொழுது அங்கு வழங்கப்படும் அனுமதிகள் குறித்தும் நிலுவையில் உள்ள கோப்புகள் குறித்தும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் பொழுது வடக்கு கோட்டாட்சியர் பூமா, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய வடக்கு மண்டல கோட்ட பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.