கோவையில் வரும் 25ம் தேதி முதல் மீண்டும் காலவரையற்ற வேலை நிறுத்தம் – ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு..!

கோவை மாநகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்த குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும், பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த அக்-2 தேதி மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 4,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நிலையில், தூய்மை பணியாளர்கள் சங்க கூட்டமைப்பினரை, மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் அப்போது, அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
அந்த பேச்சு வார்த்தையின் போது கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தொடரில் இதற்கான சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தனர். இதனால் தூய்மை பணியாளர்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் இன்று கோவை டவுன்ஹாலில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற கூட்டம் நடைபெற்றது.

இதில் கோவை மாநகராட்சியில் தூய்மை பணிகள் மற்றும் இதர பணிகளுக்காக ஒப்பந்ததாரர்களின் கீழ் பணிபுரியும் ஒப்பந்த பணியாளர்களின் கோரிக்கையான சம்பள உயர்வு வழங்குவது தொடர்பாக அரசின் அனுமதி வேண்டி கருத்துரு அனுப்பலாம் என்ற சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்த மாநகராட்சி நிர்வாகம் எடுத்த முடிவு தான் இது என்றும், இந்த தீர்மானத்தில் தங்கள் கோரிக்கைகள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை எனக் கூறி மீண்டும் வரும் தீபாவளி முதல் மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், எதிர்பார்த்த தீர்மானம் நிறைவேற்றப்படும் என எண்ணி பட்டாசு, மாலைகளுடன் மாநகராட்சி வளாகத்தில் காத்திருந்தனர். ஆனால் இன்று மாநகராட்சி மாமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் உடன்பாடு இல்லாததால், வாங்கி வந்த மாலையை வீசி எரிந்ததோடு மாநகராட்சி அலுவலகம் முன்பாக அமர்ந்து மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், எதிர்பார்த்த தீர்மானம் நிறைவேற்றப்படும் என எண்ணி பட்டாசு, மாலைகளுடன் மாநகராட்சி வளாகத்தில் காத்திருந்தனர். ஆனால் இன்று மாநகராட்சி மாமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் உடன்பாடு இல்லாததால், வாங்கி வந்த மாலையை வீசி எரிந்ததோடு மாநகராட்சி அலுவலகம் முன்பாக அமர்ந்து மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் நிறைவேற்றும் வரை தங்களது இந்த காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடரும் எனவும் அறிவித்துள்ளனர்.