கோவை சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்- 21 ஆண்டுகளுக்கு பின் 1-ம் தேதி நடக்கிறது..!

கோவை மேட்டுப்பாளையம் ரோடு சாய்பாபா காலனியில் உள்ள சாய்பாபா கோவில் உள்ளது. ஸ்ரீ நாகசாய் அறக்கட்டளை நிர்வாகத்தின் கீழ் இந்த கோவில் செயல்பட்டு வருகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள்.

இந்த கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 1-ந் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து ஸ்ரீ நாகசாய் அறக்கட்டளை துணைத்தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன், செயலாளர் எஸ்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தென்னிந்தியாவின் முதல் ஷீரடி சாய்பாபா கோவில் ஸ்ரீ நாகசாய் மந்திர் (சாய்பாபா கோவில்) ஆகும். இந்த கோவிலில் முதல் கும்பாபிஷேகம் கடந்த 1946-ம் ஆண்டு நடந்தது. அதன் பிறகு கடந்த 2002-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து 21 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 1-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. இதையொட்டி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு தீர்த்தம் மற்றும் முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 28-ந் தேதி முதல் யாக சாலை பூஜைகள் நடைபெற உள்ளன.

இந்த யாக சாலை பூஜைகளை ஆந்திராவை சேர்ந்த நரசிம்ம மூர்த்தி, வித்யாதார் சர்மா ஆகியோர் நடத்தி வைக்கிறார்கள். மேலும் இந்த கும்பாபிஷேக விழாவில் ஷீரடி சாய்பாபா கோவில், புட்டபர்த்தி சாய்பாபா கோவில் ஆகிய பகுதிகளில் இருந்து முக்கிய நபர்கள் வர உள்ளனர். அதுபோன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், உள்பட முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பிதழ் வழக்கப்பட்டுள்ளது. பேரூர் ஆதினம், சிரவை ஆதினம் உள்பட பல முக்கிய பிரமுகர்களும் வருகிறார்கள். இந்த கும்பாபிஷேக விழாவுக்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்பதால், அவர்கள், தங்களின் வாகனங்களை நிறுத்த 6 வாகன நிறுத்தும் இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. கோவிலுக்கு வரும் 1 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம், காப்பீடு, மருத்துவ முகாம், மாற்றுதிறனாளிகளுக்கு வீல் சேர் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதுபோன்று விழாவை முன்னிட்டு 3 யானை, 4 குதிரை, ஒரு பசு கொண்டு வரப்பட்டு ஊர்வலம் நடத்தப்பட உள்ளது. வருகிற 28-ந் தேதி மாலை 6.45 மணிக்கு சாலமன் பாப்பையாவின் சிறப்பு பட்டிமன்றம், 29-ந் தேதி, 30-ந் தேதி பக்தி இன்னிசை, 31-ந் தேதி புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி குழுவினரின் பக்தி இன்னிசை, 1-ந் தேதி மதுரை முத்து மற்றும் சின்னத்திரை கலைஞர்கள் பங்கேற்கும் பல்சுவை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர். பேட்டியின் போது பொருளாளர் சர்வோத்தமன், அறங்காவலர்கள் தியாகராஜன், சந்திரசேகர், சுகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.