போலீஸ் கட்டுப்பாட்டில் வ.உ.சி மைதானம்: குடியரசு தின விழாவில் கலெக்டர் சமீரன் கொடியேற்றுகிறார்- 72 போலீசாருக்கு முதல்-அமைச்சரின் பதக்கம்..!

கோவை, ஜன.25-
நாட்டின் 75-வது குடியரசு தினவிழா நாளை (26-ந் தேதி) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. கோவையில் வ.உ.சி. மைதானத்தில் குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நடக்கிறது. அன்று காலை மாவட்ட கலெக்டர் சமீரன் தேசிய கொடியை ஏற்றுகிறார். பின்னர் அவர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். இதனை தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி 72 போலீசாருக்கு முதல்-அமைச்சரின் பதக்கத்தை அணிவிக்கிறார். மேலும் சிறப்பாக பணியாற்றி அரசு ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி கவுரவிக்கிறார். மாவட்டத்தில் உள்ள சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவப்படுத்துகிறார். பின்னர் பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. கலை நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகிறது. குடியரசு தின விழாவை நடைபெறும் வ.உ.சி. மைதானம் நேற்று முதல் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளது. அங்கு 24 மணி நேரமும் வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொள்ளும் பணியினை தொடங்கியுள்ளனர்.
இதேபோன்று மாநகராட்சி அலுவலக வளாகம் முன்பு உள்ள மகாத்மா காந்தி உருவசிலைக்கு மாலை அணிவித்த பின்னர், விக்டோரியா கூட்ட அரங்கு முன்பு தேசியக் கொடியை மேயர் கல்பனா ஏற்ற உள்ளார்.
பின்னர் மாநகராட்சி பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு நடக்க உள்ளது. மாநகராட்சி நிர்வாகத்தில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் வெகுமதியை கமிஷனர் பிரதாப் வழங்குவார். மேலும் குடியரசு தின விழாவில் கவுன்சிலர்கள், பொதுமக்களுக்கு ஆற்றும் சேவைகளை பாராட்டும் வகையில், கோவை மாநகராட்சியில் 2022-23-ம் ஆண்டுக்கான சிறந்த கவுன்சிலர்களை தேர்வு செய்து சிறந்த கவுன்சிலர் விருது வழங்கப்படும் என்று மாநகராட்சிபட்ஜெட் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தேர்வுக்கான பணிகள் நடைபெற்றது. அதில் கவுன்சிலர்கள் கூட்டத்துக்கு வருகை (10 மதிப் பெண்கள்), மாநகராட்சி கூட்டத்தில் ஆக்கபூர்வமான ஆலோசனை வழங்குதல் (10 மதிப்பெண்கள்), நமக்குநாமே திட்டத்திற்கான பங்களிப்பு (10 மதிப்பெண்கள்), திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயலாக்கத்தில் பங்களிப்பு (5 மதிப்பெண்கள்), பொதுஒதுக்கீட்டு இடம் மீட்பு மற்றும் பராமரிப்பு பணியில் பங்களிப்பு (5 மதிப்பெண்கள்), வரிவசூலிப்பு பணிகளில் பங்களிப்பு (5 மதிப்பெண்கள்), பொதுமக்களிடையே நன்மதிப்பு (5 மதிப்பெண்கள்) உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் மொத்தம் 50 மதிப்பெண்களுக்கு கவுன்சிலர்களின் செயல்பாடுகள் மண்டல அளவில் பரிசீலிக்கப்பட்டு 10 கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி 10 பேர் சிறந்த கவுன்சிலர்களாக தேர்வுசெய்யப்பட்டுள்னர். அவர்கள் விவரம் வருமாறு
1.ஜி.வி. நவீன்குமார் (5-வது வார்டு), 2.ஆ.ராதாகிருஷ் ணன் (18-வது வார்டு), 3. செ.சரண்யா (30-வதுவார்டு), 4. எம்.கே.பிரவீன்ராஜ் (42- வது வார்டு), 5. பிரபா ரவீந்திரன் (48-வதுவார்டு), 6. ஏ. அன்னக்கொடி (49-வது வார்டு), 7.இலக்குமி இளஞ் செல்வி கார்த்திக் (52-வது வார்டு), 8.கே.கார்த்திக் செல்வராஜ் (72-வது வார்டு), 9.இ.அகமது கபீர் (86-வது வார்டு), ரா.கார்த்திகேயன் (100-வதுவார்டு). தேர்வு செய்யப்பட்ட கவுன்சிலர்களுக்கு நாளை மாநகராட்சியில்
நடைபெறும் குடியரசு தினவிழாவில் மேயர் கல்பனா விருதுகளை வழங்குகிறார்.