கோவை வக்கீலிடம் மாடுலர் கிச்சன் அமைத்து தருவதாக கூறி ரூ.2.50 லட்சம் மோசடி..!

கோவை: பொள்ளாச்சியை சேர்ந்தவர் சாதிக் அலி (வயது 60). வக்கீல்.

இவர் கோவை சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் தனது வீட்டில் மாடுலர் கிச்சன் அமைக்க முடிவு செய்தேன். அப்போது எனது நண்பர் ஒருவர் மூலமாக எனக்கு கோவை சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர் ரோட்டை சேர்ந்த லிங்கராஜ் (40) என்பவர் அறிமுகமானார். அவர் என்னிடம் மாடுலர் கிச்சன் அமைத்து கொடுக்க ரூ. 2.50 லட்சம் செலவாகும் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து நான் ரூ. 2.50 லட்சத்தை லிங்கராஜிடம் கொடுத்தேன். ஆனால் பணத்தை பெற்றுக் கொண்ட லிங்கராஜ் நீண்ட நாட்கள் ஆகியும் மாடுலர் கிச்சன் அமைத்து கொடுக்கவில்லை.

மேலும் பணத்தை திருப்பி கொடுக்காமலும் காலம் தாழ்த்தி வந்தார். நான் பல முறை கேட்டும் பணத்தை அவர் திருப்பி கொடுக்கவில்லை எனவே என்னிடம் பணத்தை பெற்று ஏமாற்றிய லிங்கராஜ் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை திரும்ப பெற்று தரவேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் தெரிவித்து இருந்தார். இதையடுத்து சாய்பாபா காலனி போலீசார் லிங்கராஜ் மீது நம்பிக்கை மோசடி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.