கோவை தொழிலதிபர் வளர்ப்பு நாயை வீட்டுக்குள் வைத்து ‘சீல்’ வைத்த வங்கி அதிகாரிகள்..!

கோவை புலியகுளம் பெரியார் நகரை சேர்ந்தவர் பாபுகுமார். தொழில் அதிபர்.

இவர் கடந்த 2014-ம் ஆண்டு கோவையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வீட்டு கடன் பெற்றார்.
வாங்கிய வீட்டுக்கடனை குறித்த காலத்தில் செலுத்தவில்லை என தெரிகிறது. இதனால் அவரது வீடு ஏலத்துக்கு வந்தது. அப்போது வங்கி அதிகாரிகளிடம் வீட்டினை தானே வாங்கி கொள்வதாக பாபுகுமார் கூறியிருந்தார். ஆனால் அதனை வங்கி அதிகாரிகள் ஏற்கமால் ஏலத்தில் விட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாபுகுமார் கோவை மாவட்ட நீதிமன்றத்தில் பாபுகுமார் வழக்கு தொடர்ந்தார். வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், பாபு குமாரின் வீட்டுக்கு நேற்று வங்கி அதிகாரிகள் போலீசாருடன் வந்தனர். பின்னர் அவர்கள் வீட்டில் இருந்த அனைவரையும் வெளியேற்றி விட்டு, திடீரென வீட்டுக்கு சீல் வைத்துள்ளனர். அப்போது வீட்டுக்குள் வளர்ப்பு நாய் ஒன்று இருந்துள்ளது.

அப்போது தேவையான மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நாயை வெளியில் கொண்டு வருவதற்கு அனுமதி கேட்டனர். ஆனால் அதிகாரிகள் அதற்கு மறுத்துவிட்டனர்.
இதுகுறித்து பாபுகுமார் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். பின்னர் வீட்டில் இருந்த நாயை மட்டும் 3 மணி நேரத்திற்கு பிறகு வெளியில் கொண்டு வந்து உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். நாயை வீட்டிற்குள் அடைத்து வைத்த சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.