தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ம் தேதி துவங்க உள்ள நிலையில், அதற்கான புரமோ வீடியோவை நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், வருகிற 28-ம் தேதி முதல் அடுத்த மாதம் 10-ம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இதற்கான தொடக்க விழா வருகிற 28-ம் தேதி, நேரு உள் விளையாட்டு அரங்கில் துவங்குகிறது. மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற உள்ள இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள உள்ளார். இதற்கிடையில் கொரோனா காரணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகவும், பரிசோதனைக்காகவும் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான புரமோ வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் முதல்வர் மு.க. ஸ்டாலின், இசையமைப்பாளர் ஏ.ரஹ்மான், அதிதி சங்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மாமல்லபுரம் ஒளிரும் வகையில் புரமோ துவங்குகிறது. அதிதி சங்கர் தலைமையில் பெண்கள் நடனமாடுவது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அத்துடன், ரஜினி வெளியிட்டுள்ள அறிக்கையில் முதல்வர் ஸ்டாலினின் உடல்நலம் குறித்தும் விசாரித்துள்ளார். ”கொரோனா தொற்றினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் விரைவில் குணமடைய வேண்டும்’ என்று ரஜினி காந்த் குறிப்பிட்டுள்ளார். டீஸரை வெளியிடுவதில் மகிழ்ச்சி என்றும் கூறியுள்ளார்.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தமிழக அரசும் அகில இந்திய செஸ் கூட்டமைப்பும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடரை பொறுத்தவரை, போட்டிகள் இரண்டு அரங்குகளில் நடைபெறவுள்ளன. ஒரு அரங்கில் ஒரே நேரத்தில் 50 போட்டிகளும், மற்றொரு அரங்கில் 70-க்கும் மேற்பட்ட போட்டிகளும் நடைபெறவுள்ளன. 188 நாடுகளில் இருந்து 2000 வீரர்கள் வர இருகிறார்கள். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, பாதுகாப்புடன் இந்தப் போட்டி நடத்த உள்ளது.
Leave a Reply