திம்பம் மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் – பீதியில் வாகன ஓட்டிகள்..!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில்  புலி, சிறுத்தை, யானை,  கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசிக்கின்றன. வனப்பகுதி வழியாக  தமிழகம் கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு  கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கோவைக்கு காய்கறி பாரம் ஏற்றிய  சரக்கு வேன் திம்பம் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்தது. திம்பம் மலைப்பாதை 24 வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென  சாலையின் குறுக்கே சிறுத்தை ஓடியது. இந்த காட்சியை காய்கறி வேன் ஓட்டுநர் செல்போனில் படம் பிடித்தார். இந்த வீடியோ வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.  மலைப்பாதையில் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாடுவதால் வாகன ஓட்டிகள் வாகனத்தை விட்டு கீழே இறங்க வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.