சந்திரயான்-3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை தட்டி எழுப்ப இஸ்ரோ தொடர் முயற்சி..!

சென்னை: நிலவின் தென்துருவத்தில் கடும் குளிரில் செயல்பாட்டை நிறுத்திய சந்திரயான் -3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து முயன்று வருகின்றனர்.

நேற்று விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரில் இருந்து சிக்னல் கிடைக்காத நிலையில் இன்று மிக முக்கிய நாளாகும்.

இந்தியா சார்பில் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-3 விண்கலம் இஸ்ரோ சார்பில் ஜூலை மாதம் 14ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. ஆகஸ்ட் 17 ம் தேதி உந்துவிசை கலனில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் ஆகஸ்ட் 23ம் தேதி மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் ‘சாப்ட் லேண்டிங்’ முறையில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

இதன்மூலம் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தப்படியாக நிலவில் இறங்கிய 4வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. அதோடு தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற சாதனையை இந்தியா பெற்றது. அதன்பிறகு விக்ரம் லேண்டரில் இருந்து திட்டமிட்டப்பட்டி பிரக்யான் ரோவர் நிலவில் தரையிறங்கியது.

நிலவின் மேற்பரப்பில் இஸ்ரோ மற்றும் இந்திய தேசியக்கொடியின் அடையாளத்தை பதித்து கொண்டே ஊர்ந்து சென்று ரோவர் ஆய்வு மேற்கொண்டது. ஆக்சிஜன், சல்பர், அலுமினியம், அயர்ன் உள்பட 8 வகையான தனிமங்கள் இருப்பதை உறுதி செய்யப்ட்டது. அதோடு நிலவின் தென்துருவம் தொடர்பான படங்களை இஸ்ரோவுக்கு அனுப்பியது.

இந்நிலையில் தான் நிலவில் இருள் சூழ்ந்தததால் விக்ரம் லேண்டர், ரோவர் கருவிகளின் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. ஏனென்றால் நிலவில் இருள் என்பது 14 நாட்கள் தொடர்ந்து இருக்கும். இந்த சமயத்தில் குறைந்தபட்சம் -150 டிகிரி செல்சியஸ் முதல் -253 டிகிரி செல்சியஸ் வரை குளிர் இருக்கும். இதனால் சூரியஒளி கிடைக்காமல் லேண்டர், ரோவர் கருவிகள் செயல்பட முடியாதது.

இதனால் முன்னெச்சரிக்கையாக செப்டம்பர் மாதம் 2ம் தேதி ரோவரும், செப்டம்பர் 4ம் தேதி விக்ரம் லேண்டரும் தூக்க நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இருகருவிகளிடம் இருந்த டேட்டாக்களை முழுமையாக இஸ்ரோ கைப்பற்றிய நிலையில் இரு ஆய்வு கருவிகளும் தூக்க நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சந்திரயான்-3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை பொறுத்தமட்டில் ஆயுள்காலம் என்பது 14 நாட்கள் தான். அதன்படி இரண்டு கருவிகளும் 100 சதவீதம் தங்களின் பணியை முடித்துள்ளன. இருப்பினும் தற்போது நிலவில் மீண்டும் சூரியஒளி பட தொடங்கி உள்ளது. இதனால் அடுத்த 14 நாட்கள் பகலாக இருக்கும். இதையடுத்து மீண்டும் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சியை இஸ்ரோ தொடங்கி உள்ளது.

இந்த பணி தற்போது தொடங்கி நடந்து வருகிறது. பிரக்யான் ரோவர், விக்ரம் லேண்டரை மீண்டும் கண்விழிக்க செய்யும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று நிலவில் சூரிய உதயம் ஆரம்பித்த போது, லேண்டர் மற்றும் ரோவரை மீண்டும் செயல்பட வைக்கும் முயற்சிகள் நடைபெற்றன. ஆனால் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரில் இருந்து எவ்வித சிக்னலும் பெற முடியவில்லை. சிக்னல் பெறும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தொடர்ந்து விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரிடம் இருந்து சிக்னல்களை பெறும் முயற்சியை இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர். சிக்னல்கள் கிடைக்கும் பட்சத்தில் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை இயங்க வைக்கும் அடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அதோடு நிலவில் நேற்று முதல் சூரியஒளி பட தொடங்கியது.

இதனால் இன்று 2வது நாள் பகலாக இருக்கும். இதனால் இன்றைய தினம் மிகவும் முக்கியமான நாளாகும். இன்றைய தினம் விக்ரம் லேண்டர், ரோவரிடம் இருந்து சிக்னல்கள் கிடைக்கும் பட்சத்தில் உண்மையில் அது மிகப்பெரிய சாதனையாகும். இதனால் இஸ்ரோவின் செயல்பாட்டை பிற உலக நாடுகளின் விண்வெளி ஆய்வு மையங்கள் உற்று கவனித்து வருகின்றன.