தஞ்சை வியாபாரியிடம் பூண்டு வாங்கி ரூ. 8.25 லட்சம் மோசடி- கோவை கும்பல் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார்..!

தஞ்சாவூர் கீழரத வீதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 42) இவர் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மொத்தமாக பூண்டு வாங்கி தமிழ்நாடு முழுவதும் வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- என்னை கடந்த 20 22 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கோவை உக்கடம் அருகே கரும்புக்கடைச் சேர்ந்த அன்வர் சதாத்,மீரான், மைதீன்,சையது தாவூத் சுந்தர் சேலத்தைச் சேர்ந்த பிரபு மணிகண்டன் மற்றும் தஞ்சாவூரை சேர்ந்த மோனிகா என்ற கவுதமி ஆகியோர் தொடர்பு கொண்டு மிளகு பூண்டு மல்லி, கடுகு, சீரகம் உள்ளிட்ட மளிகை பொருட்கள் வாங்கி வெளிநாடுகளுக்கு மொத்தமாக அனுப்பி வியாபாரம் செய்து வருகிறோம் என்று கூறினர். மேலும் அவர்கள் என்னிடம் 10 டன் பூண்டுவை கோவைக்கு லாரியில் அனுப்பி வைத்தால் அதற்கான பணத்தை உடனே அனுப்பி வைப்பதாக கூறினார்கள். இதை நம்பி நான் 10 டன் பூண்டு தஞ்சாவூரில் இருந்து கோவைக்கு லாரியில் அனுப்பி வைத்தேன்..ஆனால் அவர்கள் அதற்கான ரூ.12 லட்சத்தை தராமல் இழுத்து அடித்து வந்தனர் .பின்னர் அவர்களை தொடர்ந்து கேட்ட போது ரூ 3 லட்சத்து 25 ஆயிரம் மட்டும் கொடுத்தனர். அதன் பிறகு ரூ 8 லட்சத்து 25 ஆயிரத்தை கொடுக்காமல் மோசடி செய்து விட்டனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து என் பணத்தை மீட்டு தருமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது .இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..