நம்பிக்கை உள்ளது.. அவரே எங்களை வழி நடத்துவார்… செயற்குழு கூட்டத்தில் காங். மூத்த தலைவர் தகவல்.!!

டெல்லி: நேற்று நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட தகவல்கள் குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு 5 மாநில தேர்தல் முடிவுகள் பெரும் ஏமாற்றத்தையே கொடுத்தது. பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மோசமான ஒரு தோல்வியைச் சந்தித்தது.

கோவா, உத்தரகண்ட், மணிப்பூர் மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியால் பாஜகவை வீழ்த்த முடியவில்லை. உத்தரப் பிரதேசத்தில் வெறும் 2 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சியால் வெல்ல முடிந்தது.

இந்தத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமின்றி நிர்வாகிகள், தலைவர்கள் எனப் பலரும் கடும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. மேலும், இந்த மோசமான தோல்வி கட்சித் தலைமை குறித்த விவாதத்தையும் மீண்டும் கிளப்பி உள்ளது. அதிருப்தி தலைவர்களாக அறியப்படும் ஜி23 தலைவர்களில் ஒருவரான சசி தரூர், கட்சித் தலைமையில் சீர்திருத்தம் தேவை என்றும் கட்சியில் இனியும் மாற்றத்தைத் தவிர்க்க முடியாது தெரிவித்திருந்தார்.

இந்தச் சூழலில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி. மல்லிகார்ஜுன் கார்கே, அம்பிகா சோனி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். அதேநேரம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட 4 பேர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

நேற்று மாலை 4 மணிக்குத் தொடங்கிய 2.30 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற இந்தக் கூட்டம் மாலை 6.30 மணிக்கு நிறைவடைந்தது. சோனியா காந்தியே காங்கிரஸ் தலைவராகத் தொடர்வார் என இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாகக் காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். தேர்தல் முடிவுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகவும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க விரைவில் “சிந்தன் ஷிவிர்” என்ற ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, “காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி வரும் காலத்தில் எங்களை வழிநடத்தி, தேவையான நடவடிக்கைகளை எடுப்பார். அவரது தலைமையின் மீது அனைவருக்கும் நம்பிக்கை உள்ளது” என்றார். அதேபோல கோவா காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், “சோனியா காந்தி கட்சியின் தலைவராகத் தொடர்வார். 5 மாநில தேர்தல்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் வரவிருக்கும் தேர்தலுக்கு எப்படி தயார் செய்வது என்பது குறித்து ஆலோசித்தோம்:” என்றார்.