எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை திசைத் திருப்பவே பாஜகவினர் அமலாக்கத்துறையை வைத்து சோதனை செய்கிறது – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேட்டி.!!

அமைச்சர் பொன்முடி வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் நடத்தி வரும் சோதனையை அடுத்து, முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.

பெங்களூருவில் இன்று காங்கிரஸ் தலைமையில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க அவர் சென்னை விமானம் நிலையம் வந்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது,”வட மாநிலங்களில் அமலாக்கத்துறையை ஒன்றிய அரசு, மாநில அரசு மீது ஏவப்பட்டு வந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டிலும் அந்த பணியை தொடங்கியுள்ளனர். அமலாக்கத்துறையின் இந்த சோதனை குறித்து திமுக கவலைப்படவில்லை,  அஞ்சவில்லை.

அமைச்சர் பொன்முடி மீது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் புனையப்பட்ட பொய் வழக்கில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்துகின்றனர். இது 13 ஆண்டுகளுக்கு முன் பதியப்பட்டது. சுமார் 10 ஆண்டு காலமாக அதிமுக ஆட்சியில் இருந்து இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது இதை கையில் எடுத்துள்ளனர்.

அமைச்சர் பொன்முடி மீது சுமத்தப்பட்ட 2 வழக்குகள் தள்ளுபடியாகின. வரும் 2024 தேர்தலில் மக்கள் இதற்கெல்லாம் பதில் வழங்குவார்கள். பீகாரிலும், கர்நாடகாவிலும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை திசைத்திருப்பவே பாஜகவினர் இதை செய்கின்றனர். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்திருப்பது பாஜகவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது, அதனால் இந்த சோதனை” என்றார்.

மேலும், இது திமுக ஆட்சிக்கும், உங்களுக்கும் (முதல்வர்) அளிக்கப்படும் நெருக்கடியாக இதை பார்க்கிறீர்களா என செய்தியாளர்கள் முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேள்வியெழுப்பினர். அதற்கு அவர்,”ஏற்கெனவே, ஆளுநர் எங்களுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை செய்து வருகிறார். அதில் தற்போது அமலாக்கத்துறையும் சேர்ந்துள்ளது” என பதிலளித்தார்.

பெங்களூரு செல்லும் நிலையில் அங்கு காவேரி பிரச்னை குறித்து விவாதிப்பீர்களா என்ற கேள்விக்கு,”காவேரி பிரச்னையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நிலைப்பாடு தான் எங்களுடையதும், அதே பாதையில் தான் நாங்களும் பயணிக்கிறோம். இது தமிழ்நாட்டிற்கு மட்டுமில்லை, இந்தியாவுக்கு எதிராக வந்துள்ள அச்சுறுத்தல் இது. மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவை ஒழித்துக்கட்டவே, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்திருப்பதாகவும். பெங்களூரு செல்வது காவேரி பிரச்னையை பேச அல்ல” எனவும் அவர் கூறினார்.