கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் பத்மநாபபுரம், குளச்சல், குழித்துறை, கொல்லங்கோடு ஆகிய நான்கு நகராட்சிகளும் தி.மு.க வசம் உள்ளன.
பத்மநாபபுரம் நகராட்சி சேர்மனாக அருள்சோபன் இருக்கிறார். துணைத் தலைவராக இருந்த தி.மு.க-வைச் சேர்ந்த மணி சமீபத்தில் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இதையடுத்து காலியாக இருந்த துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க சார்பில் கவுன்சிலர் உண்ணிகிருஷ்ணனும், தி.மு.க சார்பில் கவுன்சிலர் ஜெயசுதாவும் போட்டியிட்டனர்.
மொத்தம் 21 வார்டுகளைக்கொண்ட பத்மநாபபுரம் நகராட்சியில் தி.மு.க -7, பா.ஜ.க- 7, சுயேச்சை -6, ஜனதாதளம் -1 இடத்திலும் வென்றன. இதில் கவுன்சிலர் மணி மரணமடைந்ததால், தி.மு.க கவுன்சிலர்கள் எண்ணிக்கை 6-ஆகக் குறைந்தது. மேலும் மொத்தத்தில் 20 கவுன்சிலர்களே தற்போது உள்ளனர். துணைத் தலைவர் தேர்தலில் 20 கவுன்சிலர்களும் வாக்களித்தனர். இதில் பா.ஜ.க வேட்பாளர் உண்ணிகிருஷ்ணன் 12 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். தி.மு.க வேட்பாளர் ஜெயசுதா 8 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
பத்மநாபபுரம் நகராட்சி பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதிக்குள் வருகிறது. பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினரான தி.மு.க-வைச் சேர்ந்த மனோ தங்கராஜ் மாநில தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சராக இருக்கிறார். இந்த நிலையில் பத்மநாபபுரம் நகராட்சி துணைத் தலைவர் பதவியை பா.ஜ.க பிடித்திருப்பது பேசுபொருள் ஆகியிருக்கிறது. பத்மநாபபுரத்தில் என்ன நடந்தது என விசாரித்தோம்.
“பத்மநாபபுரம் நகராட்சித் தலைவர் தேர்தலிலும் சரி, துணைத் தலைவர் தேர்தலிலும் சரி.. வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது 6 சுயேச்சைகள்தான். தி.மு.க-வின் 6 கவுன்சிலர்களும், வேறு இரண்டு கவுன்சிலர்களும் நகராட்சித் தலைவராக அருள்சோபனை தேர்ந்தெடுக்க சுயேச்சைகள் ஒத்துழைத்தனர். அதற்கு பதிலாக சுயேச்சை கவுன்சிலரான வினோத்குமார் என்பவர் தனக்கு துணைத் தலைவர் பதவி தர வேண்டும் எனக் கேட்டதாக சொல்லப்படுகிறது. அப்போது சேர்மன் பதவியில் அருள்சோபன் வெற்றிபெற்ற பிறகு, துணைத் தலைவர் தேர்தலில் வினோத்குமாரை எதிர்த்து தி.மு.க-வின் மணி போட்டியிட்டு வெற்றிபெற்றார். இது சுயேச்சைகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
சுயேச்சைகளின் அதிருப்தியை இந்தத் தேர்தலில் பா.ஜ.க சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது. துணைத் தலைவருக்கான இடைத்தேர்தலில் தி.மு.க தரப்பில் இரு தரப்பினர் தங்களுக்குத் துணைத் தலைவர் பதவி வேண்டும் எனக் கேட்டிருக்கிறார்கள். அதில் ஒரு தரப்புக்குக் கொடுத்ததால், மறு தரப்பு அதிருப்தியில் இருந்திருக்கிறது. எனவே, அதில் சில ஓட்டுகளும் சிதறியிருக்க வாய்ப்பு இருக்கிறது. தேர்தல் நடக்கும் சமயத்தில் தி.மு.க வேட்பாளர் ஜெயசுதா, சேர்மன் அருள்சோபன் உட்பட 12 கவுன்சிலர்களாக நகராட்சிக்கு வந்திருக்கிறார். ஆனால், வாக்கு எண்ணிக்கை முடிவில் உடன் இருந்தவர்களே தி.மு.க வேட்பாளர் ஜெயசுதாவின் காலை வாரிவிட்டு அதிர்ச்சி கொடுத்திருக்கின்றனர்” என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
Leave a Reply